*    கோடம்பாகத்தில் முக்கிய ஹீரோக்களின் புதிய சினிமாவுக்கு வரும் பெரிய பிரச்னை என்னவென்றால், அந்தப் படத்தின் பாதி ஷூட் போய்க் கொண்டிருக்கும் நிலையில் ‘இந்தப் படம் என்னோட கதை. என் கதையை திருடி எடுக்கிறாங்க!’ என்று ஜூனியர் இயக்குநர்கள் பூகம்பம் கிளப்புவதுதான். அந்த லிஸ்டில் லேட்டஸ்டாக கார்த்தியின் ‘சுல்தான்’ படமும் இணைந்துள்ளது. விஷயம் வெளியே தெரிந்து அசிங்கப்பட்டு அதன் பின் செட்டில் பண்ணுவதை விட, துவக்கத்திலேயே செட்டில் பண்ணிடலாம் என்று அந்த புயல் நபரை ‘கவனித்து’ புஸ்வாணம் பண்ணிவிட்டார்களாம். 

*    தவமாய் தவமிருந்து! எனும் தரமான படத்தை தந்து, தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்திய மிக தரமான இயக்குநர்தான் சேரன். அவர் விஜய் சேதுபதியின் கால்சீட்டை வாங்கி வைத்துக் கொண்டு வருடக்கணக்கில் காத்திருக்கிறார். இப்போது விஜய்சேதுவின் சம்பளம் பனிரெண்டு கோடியாம். இதற்கு ஏற்ற தயாரிப்பாளரை பிடிப்பதற்காக அல்லாடுகிறாராம் சேரன் பாவம். 

*    சிம்பு கூட்டும் ‘மாநாடு’ படத்துக்கு ஏழரை மேல் ஏழரையை கூட்டிக்  கொண்டிருக்கிறது துரதிர்ஷ்ட சனியன்.  ஆனானப்பட்ட சிம்புவே மீண்டும் கால்சீட் கொடுத்து வந்துவிட்டார். ஆனால்  எஸ்.ஜே.சூர்யாவின் கால்சீட்டில் பிரச்னை, ஹீரோயின் கல்யாணியின் கால்சீட்டில் பிரச்னை என்று ஏகத்துக்கு சிக்கல் இடைவேளை இன்றி ஓடிக் கொண்டிருக்கிறது. 

*    தர்பார் படத்தின் நஷ்டத்தை சரி பண்ணுங்க! என்று ரஜினியின் வீட்டின் முன் விநியோகஸ்தர்கள் வந்து நின்ற கதை தெரிந்ததே. ரஜினியை சந்திக்க முடியாத அவர்கள் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் அலுவலகத்துக்கு போனார்கள். அப்போது துணை இயக்குநர் ஒருவர் அவர்களை மிக மோசமாக திட்டிவிட, பெரும் ரகளையாகிவிட்டதாம். இது பற்றி ‘முருகதாஸ் அலுவலகத்தில் கெட்டவார்த்தை தர்பார்!’ என்று தங்களின் வாட்ஸ் ஆப் குழுக்களில் கிழிக்கிறது விநியோகஸ்தர் டீம். 

*    ரஜினியை வைத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில்  நான்காவது ஹீரோயினாக இணைந்திருக்கிறார் நயன் தாரா. அவருக்கு ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தை போட்டு  வரவேற்றிருக்கிறது தயாரிப்பு தரப்பு. இந்த தகவல் ரியல் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தெரியுமா? என்றால்,  தெரியும்! அவரே சந்தோஷத்துடன் நயனுக்கு இந்த ‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்தை ஷேர் செய்திருக்கிறார்! என்று பதில் வருகிறதாம். 
ரைட்டு!