ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் 'தர்பார்'. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வந்தது. அப்போது, ரஜினியுடன் நடித்தவர்கள் பலரும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

இதனிடையே தான் தங்கியிருந்த விடுதியின் லிஃப்ட்டில் தன் அறைக்குச் ரஜினி சென்று கொண்டிருக்கிறார்.  அப்போது இந்திய கிரிக்கெட் அணி வீரர்  ஹேமங் பதானி ரஜினியைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

 

இது குறித்து ஹேமங் பதானி தனது ட்விட்டர் பதிவில், "இந்த 'ரசிகனின்' தருணம் சிறிது நேரத்துக்கு முன்னால் நடந்தது. நான் எனது அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது லிஃப்ட் கதவு திறக்கும்போது ஆச்சரியப்பட்டேன். லிஃப்ட்டுக்குள் தலைவன் போல நின்று கொண்டிருந்தார்.

 

அவர் எவ்வளவு எளிமையானவர், அடக்கமானவர் என்பதை மற்றவர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். இப்போது நானே நேரடியாகப் பார்த்தேன். ரஜினியின் 'ஒளி'யை கண்டிப்பாக உணர்ந்தேன். அவரிடம் ஏதோ ஒரு விசேஷம் உள்ளது. ரத்த ஓட்டம் அதிகமானது. தலைவர் ரஜினிகாந்த்துடன் இருந்த இரண்டு நிமிடங்கள் என் வாழ்நாள் முழுவதும் நினைத்துப் பார்த்து மகிழ்வேன்” என்று தெரிவித்துள்ளார் பதானி.