ஐதராபாத்தில் முகாமிட்டிருந்த ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு, தற்போது கொரோனா பாதிப்பு உறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புத்தாண்டு தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இதன் காரணமாக திரையுலகம் கடும் பாதிப்பை சந்தித்தது. பொங்கலுக்கு ரிலீசாவதாக இருந்த வலிமை, ராதே ஷ்யாம், ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்களின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டன. இது ஒருபுறம் இருந்தாலும், திரைப்பிரபலங்கள் ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுவது தொடர்கதை ஆகி வருகிறது.
கடந்த இரு மாதங்களில் நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம், அருண்விஜய், விஷ்ணு விஷால், மகேஷ் பாபு, வடிவேலு, சிரஞ்சீவி, மம்முட்டி, துல்கர் சல்மான் ஆகியோரும். நடிகைகள் குஷ்பு, மீனா, திரிஷா, ஷோபனா, ஷெரின், கஜோல், ஜான்வி கபூர், பாரதிராஜா ஆகியோரும் கொரோனாவின் பிடியில் சிக்கி பின்னர் சிகிச்சை பெற்று மீண்டனர்.

இந்நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கு தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் அவர் உறுதிப்படுத்தி உள்ளார். அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது: தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தும் எனக்கு கொரோனா பாசிடிவ் வந்துவிட்டது. ப்ளீஸ் அனைவரும் மாஸ்க் போட்டுக்கோங்க, தடுப்பூசி செலுத்திக்கொண்டு பாதுகாப்பா இருங்க. இந்த வருஷம் இன்னும் என்னவெல்லாம் கொடுக்கப்போகுதுனு பார்ப்போம்” என கூறியுள்ளார்.
ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004-ம் ஆண்டு திருமணமானது. இத்தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகும் நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருவரும் அறிக்கை வெளியிட்டு விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர். விவாகரத்து முடிவுக்கு பின் மன உளைச்சலில் இருந்த ஐஸ்வர்யா, அதிலிருந்து மீள ஷூட்டிங் பணிகளில் கவனம் செலுத்தி வந்தார்.

இதற்காக ஐதராபாத்தில் முகாமிட்டிருந்த அவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு உறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் நலம் பெற வேண்டி ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் நடிகர் தனுஷின் அண்ணன் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி, “Get well soon love” என ஐஸ்வர்யாவுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி உள்ளார்.
