Asianet News TamilAsianet News Tamil

வளர்த்துவிட்ட இடத்திற்காக குரல் கொடுக்க மறுப்பது ஏன்..?  ரஜினி-கமலுக்கு தயாரிப்பாளர் சாட்டையடி கேள்வி..! 

rajinikanth and kamal not support the strike why?
rajinikanth and kamal not support the strike why?
Author
First Published Mar 14, 2018, 2:21 PM IST


ரஜினி, கமல் இருவரும் அரசியலில் குதித்து விட்டார்கள். ஒருவர் அரசியல் சுற்றுப்பயணம் கிளம்பிவிட்டார்.... இன்னொருவர்  இமயமலைக்கு சுற்றுப்பயணம் கிளம்பிவிட்டார். ஆனால் அவர்களை இந்த நிலைக்கு உயர்த்திய சினிமா துறையோ,  சரிவிலிருந்து தன்னை மீட்கும் விதமாக கடந்த மார்ச்-1ஆம் தேதி முதல் போராட்டத்தில் குதித்துள்ளது.

சினிமாவின் ஆதார சுருதியாக, அச்சாணியாக இருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம் முன்னெடுத்து நடத்தும் இந்த போராட்டத்தை, யாருக்கோ எவருக்கோ நடத்துகிறார்கள் என்பது போல நினைத்துக்கொண்டு, திரையுலக முன்னணி நட்சத்திரங்கள் யாரும் இதற்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட வாய் திறக்கவில்லை.. 

இதனை குறிப்பிட்டு, தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே பிலிம்ஸ் ஜே.சதீஷ்குமார், ரஜினி, கமல் இருவரையும் “இந்த திரைப்பட துறையின் இன்னல்களை களைய ஏதேனும் செய்துவிட்டு, அதன்பின் உங்கள் அரசியல் பயணத்தை துவக்குங்கள்.. இதில் உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம்” என  வேதனையுடன் வேண்டுகோள் வைக்கிறார்.

இது குறித்து அவர் கூறியுள்ளது...

“ரஜினி, கமல் இருவரும் அரசியலுக்கு வந்துவிட்டனர். ஆனால் அவர்களை ஏற்றிவிட்ட ஏணி இன்று சீக்கு வந்த யானையாக சின்னாபின்னமாகிக்கொண்டு இருக்கிறது. நீங்கள் உங்கள் மக்கள் சேவையை தாராளமாக செய்ய ஆரம்பியுங்கள்.. ஆனால் அதற்குமுன் உங்களை வளர்த்துவிட்ட இந்த திரையுலகத்திற்கு ஏன் குரல் கொடுக்க மறுக்கிறீர்கள்..? என குறிப்பிட்டிருந்தேன்..

தற்போதைய போராட்டத்தை வெறும் க்யூப்புக்கான போராட்டமாக மட்டுமே இலக்கு நிர்ணயம் செய்யாமல் இந்த திரைத்துறையில் இருக்கும் பல பிரச்சனைகளுக்கும் சேர்த்து ஒரே போராட்டமாக நடத்தவேண்டும்.  

நடிகர், நடிகைகள் சம்பளத்தை கட்டுக்குள் கொண்டுவரவேண்டும்.. எந்த ஹீரோவாக இருந்தாலும் அதிகபட்சம் 2 கோடி ரூபாய்க்குள் சம்பளம் நிர்ணயம் செய்யவேண்டும்.. அதன்பின் படம் ஓடுவதை வைத்து, அதில் கிடைக்கும் லாபத்தை வைத்து அதில் அவர்களுக்கான சதவீதத்தை கொடுக்கவேண்டும்.. இப்படி செய்யும்போது தயாரிப்பளர்களும் நிம்மதியாக படம் தயாரிக்க முடியும்.. படம் நன்றாக ஓடும் பட்சத்தில் ஹீரோ, ஹீரோயின்கள் அனைவருக்குமே நல்ல லாபமும் கிடைக்கும். அதேசமயம் படம் ஓடாவிட்டாலும் அவர்களுக்கு பெரிய நட்டமும் இல்லை..

இந்தில இந்த சிஸ்டம் தான் இருக்கு.. இன்றைக்கு மலையாள திரையுலகில் சூப்பர்ஸ்டாராக இருக்கும் மோகன்லாலின் சம்பளமே 3 கோடி தான். ஆனால் இங்கேதான் புதிதாக ஒரே ஒரு படத்தில் நடித்தவர்கள் கூட, அடுத்த படத்திற்கு 5 கோடி ரூபாய் கேட்கிறார்கள். அவங்க டிமான்ட் பண்றத கொடுத்து, இல்ல நாமே அவங்க சம்பளத்தை ஏத்திவிட்டு, நம்ம தலையில நாமளே கொள்ளி வச்சுக்கிறோம்.

இதேபோல இயக்குனர்களுக்கும் சம்பள விகிதம் நிர்ணயம் பண்ணவேண்டும். முதல் படம் ஹிட் என்றால் அடுத்த படத்திற்கே இரண்டு கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறார்கள். எதற்காக அவ்வளவு கொடுக்கவேண்டும்..? ஜனாதிபதிக்கே அவ்வளவு சம்பளம் கிடையாது. 3௦ நாட்கள் வேலை செய்யுறதுக்கு 2 கோடி கொடு என்றால் ரொம்பவும் டூமச்.. 

எல்லோருக்கும் கன்னாபின்னாவென சம்பளத்தை ஏற்றிவிடும் வேலையை நாம் செய்யவேண்டாம். அதேபோல சாட்டிலைட் உரிமையை யார் வாங்குகிறார்களோ அவர்களுக்கு மட்டும் ஒத்துழைப்பு கொடுங்க.. படங்களை ரிலீஸ் செய்வதில் ஒரு வரைமுறையை கொண்டு வரவேண்டும்.. இந்த பிரச்சனைகளைஎல்லாம் இப்போது நடக்கும் போராட்டத்திலேயே சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொன்றுக்குமாக தனித்தனியாக ஸ்ட்ரைக் பண்ணவேண்டாம்.

இன்னொரு பக்கம் தியேட்டர்களில் நடக்கும் சில அடாவடிகளையும் நாம் கட்டுக்குள் கொண்டுவந்தே ஆகவேண்டும்.. இன்று தியேட்டர்களில் தண்ணீர், பாப்கார்ன், காபி உள்ளிட்ட தின்பண்டங்களை மூன்று, அல்லது நான்கு மடங்கு விலை வைத்து விற்கிறார்கள்.. அவற்றை எம்.ஆர்.பி விலைக்கே விற்க வலியுறுத்த வேண்டும். பார்க்கிங்கில் அநியாய கட்டணம் வசூலிக்கிறார்கள். இதை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். இவையெல்லாம் நம் படங்களை பார்க்க தியேட்டருக்கு தேடிவரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை குறைத்து விடுகின்றன. இதை முறைப்படுத்த வேண்டும். மேலும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மல்டிபிளக்ஸ் மட்டுமல்லாது பி அன்ட் சி என அனைத்து திரையரங்குகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட வேண்டும்.

அதேபோல தியேட்டர்களில் நம் தமிழ் படங்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட ஆவண செய்யவேண்டும். காரணம் மிகப்பெரிய மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் தெலுங்கு, மலையாளம், ஆங்கில படங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து திரையிடப்படுகின்றன.. இப்போதுகூட நாம் இங்கே போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கும் சமயத்தில் அவர்கள் மற்ற மொழி படங்களை திரையிட்டு அதில் லாபம் பார்த்துவிடலாம் என நினைக்கின்றனர். 

அதுமட்டுமல்ல, மற்ற மொழி படங்களை டப்பிங் செய்து தமிழ்ப்படம் போல திரையிடுகின்றனர். அதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க கூடாது.. கேரளா, கர்நாடகா மாநிலங்கள் போல அந்தந்த மொழி படங்களை அந்த மொழியிலேயே வேண்டுமானால் திரையிட்டுக் கொள்ளட்டும். பி அன்ட் சி தியேட்டர்களில் இந்த பிரச்சனை இல்லை.. இந்த விஷயத்தில் இதுபோன்ற மல்டிபிளக்ஸ் தியேட்டர்களும் நம்மை நம்பித்தான் இருக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்..

இவ்வளவு பிரச்சனைகளையும் ஒன்றாக ஒருங்கிணைத்து போராடவேண்டும்.. இவற்றுக்கெல்லாம் தீர்வு கிடைக்க இன்னும் ஒரு மாத கால தாமதம் ஆனாலும் பரவாயில்லை. அனைத்திற்கும் தீர்வை கொண்டுவந்து விட்டு கோடை விடுமுறையில் இருந்து புதிய திரையுலகை நாம் கட்டமைத்து விடலாம்.. நம்மால் முடியும்.

திரையுலகத்தில் இவ்வளவு பிரச்சனைகள் உள்ள இந்த சூழ்நிலையில் ரஜினி, கமல் இருவருமே இதுபற்றி வாய் திறக்காமல் இருப்பது ஏன்..? ஒவ்வொரு ஆற்றையும் பார்த்துவிட்டு வந்து இது மாசுபட்டு கிடக்குது, இதை சுத்தப்படுத்தனும்னு கமல் சொல்றாரு.. நீங்க வளர்ந்த இந்த இடத்துல இவ்வளவு பெரிய குப்பை மொத்தமா முடங்கிப்போய் கிடக்குது.. இதை யாரு சுத்தப்படுத்துவது..? 

ரஜினி, கமல் ரெண்டு பேருமே நாட்டுக்கு நல்லது செய்யுங்கள்.. வேண்டாமென சொல்லவில்லை.. முதலில் நீங்கள் வளர்ந்த இடத்திற்கு செய்யவேண்டியது உங்கள் கடமை அல்லவா..? இன்னும் இந்த பிரச்சனை குறித்து இவர்கள் இருவரும் கேள்விகூட கேட்கவில்லை என்பதுதான் வேதனை தருகிறது. நீங்கள் இருவரும் குரல் கொடுத்தால் அடுத்த 5 நிமிடத்தில் முடிந்துவிடுகிற பிரச்சனை இது. தேவைப்பட்டால் க்யூப் போல புதிதாக ஒன்றை கூட நாம் ஆரம்பிக்க முடியும்.. இதற்கான முயற்சியை நீங்கள் எடுங்கள்.. உங்கள் பின்னாடி நாங்கள் வர தயாராக இருக்கிறோம்.. இப்போதைய உங்கள் சேவை முதலில் கோடம்பாக்கத்துக்குத்தான் தேவை” என தனது மனதில் உள்ள ஆதங்கம் முழுவதையும் ஒரு தயாரிப்பாளரின் மனநிலையில் இருந்து கொட்டி தீர்த்தார் ஜே.சதீஷ்குமார் ..

அவரது பேச்சு ரஜினி-கமலுக்கு எதிரானது போல தோன்றினாலும் நிஜத்தில், ரஜினி, கமல் இவர்கள் தலையிட்டால் இந்த திரையுலக பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு கிடைத்து விடும் என்கிற நம்பிக்கை அவரிடம் இருப்பதையே நம்மால் உணர முடிகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios