2.0 படத்தின் டிரெய்லர் நவம்பர் 3ஆம் தேதி வெளியாகும் என்று அப்படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. சிவாஜி, எந்திரன் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து பிரமாண்ட இயக்குனர் சங்கருடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்துள்ள படம் 2.0. 2010ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த எந்திரன் படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படத்தை சங்கர் இயக்கியுள்ளார். இந்திய அளவில் மிகப்பெரிய பொருட் செலவில் உருவாகிய படங்களில் ஒன்று என்ற பெருமையுடன் இப்படம் தயாராகியுள்ளது. படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் 600 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது, 

இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக, சங்கரின் முந்தைய படமான ஐ-யில் நடித்த எமி ஜாக்சன் நடிக்கிறார். இதில் எந்திரனில் நடித்த ஐஸ்வர்யா ராயும் குணசித்ர வேடத்தில் தோன்றுவதாக தகவல் கசிந்துள்ளது. வில்லன் கதாப்பாத்திரத்தில் பாலிவுட்டின் பிரபல நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார்.  ஷங்கரின் படங்கள் என்றாலே, கிளைமேக்சில் நிச்சயம் சமுதாயத்திற்கு தேவையான கருத்து நிச்சயம் இருக்கும். அதுவும் மனதில் பதியும் படி செய்து விடுவது தான் சங்கரின் திரைக்கதை யுக்தி. அதேபோல் இந்தப் படத்திலும் நவீன யுகத்திற்கு ஏற்ற கருத்து இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் டீசர் கடந்த மாதம் 13 ஆம் தேதி வெளியாகி யூடியூப்பை திணறடித்தது. நிமிடத்திற்கு நிமிடம் இந்த டீசர் புதிய சாதனை படைத்தது. 

இந்தியில் இந்த டீசர் 4 கோடி முறையும், தமிழில் ஒரு கோடியே 80 லட்சம் முறையும் இந்த டீசர் பார்க்கப்பட்டுள்ளது. இதில் வசீகரன் தோற்றத்துடன் ரஜினிகாந்த் காணப்படுவார். எந்திரன் படத்தின் கிளைமேக்சில் அழிக்கப்படும் சிட்டி என்ற ரோபோ, இபடத்தில் வில்லனை அழிப்பதற்காக மீண்டும் உருவாக்கப்படுவதைப் போல் காட்சிகள் இருக்கும். 

படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சம் பெற்றுள்ள நிலையில், நவம்பர் 29ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் மிக அதிகமாக திரையரங்குகளில் படம் ரிலீசாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. இது மட்டும் அல்லாமல் தற்போது 2.0 தொடர்பான மேலும் ஒரு இனிப்பான செய்தி வந்துள்ளது. இப்படத்தின் டிரெய்லர் நவம்பர் 3ஆம் தேதி வெளியாகும் என்பது தான் அந்த செய்தி.  தீபாவளிக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் டிரெய்லர் வெளியாக உள்ளதால், ரஜினி ரசிகர்களுக்கு அன்றைய தினமே தீபாவளி தான்..