100 கோடி என்கிற அசாதாரண சம்பள இலக்கை தனது அடுத்த படத்தில் எப்படியாவது எட்டிவிடவேண்டும் என்ற சூப்பர் ஸ்டாரின் ஆசை நிராசையாகிவிட்டது. வேறு வழியின்றி பாதி சம்பளத்தில் நடிக்க அவர் பெருந்தன்மையுடன் ஒப்புக்கொண்டிருப்பதாக, அவரை வைத்து அடுத்த படம் இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டிசம்பரில் உறுதி செய்யப்பட்ட ஏ.ஆர்.முருகதாஸ் ரஜினி கூட்டணியின் அடுத்த படம் குறிப்பிட்ட கட்டத்தை விட்டு நகராமல் இருக்கும் இடத்திலேயே கடந்த இரண்டு மாதங்களாக நொண்டியடித்துக்கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தது ரஜினி எதிர்பார்த்த சம்பளம். அவர் எதிர்பார்த்தது 100 கோடி. ஆனால் படத்தைத் தயாரிக்க தயாராக இருக்கும் லைகா நிறுவனமோ ஏற்கனவே ‘2.0’விலேயே பலத்த அடி பட்டிருந்ததால் 50 கோடிக்கு மேல் தரத்தயாராக இல்லை.

இந்நிலையில் வேறு தயாரிப்பாளர்களுக்கு படத்தை மாற்றிவிட ரஜினி, முருகதாஸ் அன் கோக்கள் எடுத்த முயற்சிகள் எதுவும் செல்ஃப் எடுக்கவில்லை. அதிக பட்சமாக இதே 50 கோடியை சம்பளமாக தர தயாரிப்பாளர் தாணு மட்டுமே தயாராக இருந்தார். நிலைமையை சற்று தாமதமாக உணர்ந்துகொண்ட ரஜினி தற்போது லைகா நிறுவனத்திடம் தனது பழைய சம்பளமான 50 கோடிக்கே ஓ.கே. சொல்லிவிட்டாராம்.

மகள் கல்யாணம் முடிந்ததும் உடனே தடல்புடலாக அடுத்த படமும் துவங்கும். படப்பிடிப்புகளின் நடுவே நிருபர்கள் ‘அரசியலுக்கு எப்போ வருவீங்க சார்?’ என்று கேட்டால் , ‘இதோ இந்த முருகதாஸ் படம் முடிஞ்ச உடனே வந்துடவேண்டியதுதான் ஹா ஹா ஹா’ என்று சிரிப்பார் ரஜினி.