சூர்யாவின் ‘காப்பான்’ ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சியில், ரஜினியும் கமலும் கலந்துகொள்ள உள்ள நிலையில் அவரது கல்விகொள்கை குறித்து சூப்பர் ஸ்டார் ஆதரித்துப்பேசுவாரா அல்லது தவிர்ப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிரமாண்டமாக தயாராகும் சூர்யாவின் காப்பான் படப் பாடல் வெளியீட்டு விழாவில், சிறப்பு விருந்தினர்களாக ரஜினி, ஷங்கர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.அயன், மாற்றான் படங்களைத் தொடர்ந்து சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் காப்பான். இந்தப் படத்தில் சூர்யாவுடன் இணைந்து முக்கியக் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்திருக்கிறார். மேலும் ஆர்யா, சாயிஷா, பூர்ணா, பொமன் இரானி, சமுத்திரக்கனி எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து காப்பானில் நடித்திருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்

சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசரும் சிறுக்கி என்ற பாடலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பைத் தூண்டியிருக்கிறது. இந்த நிலையில், ஜூலை 21ஆம் தேதி இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஸ்ரீ ராமச்சந்திர கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவுள்ளது. படத்தைத் தயாரித்த லைகா நிறுவனம் பாடல் வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருக்கிறது.அதனால் காப்பான் பாடல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினி, ஷங்கர், வைரமுத்து ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்தச் செய்தியால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவரும் புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து சூர்யா பேசியுள்ளது சர்ச்சையானது. சூர்யாவுக்கு எதிராக அதிமுக, பாஜக கட்சியினர் பேசிவரும் நிலையில் அவருக்கு ஆதரவாக கமல்ஹாசன், சீமான், பா.ரஞ்சித் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் ரஜினி இதுகுறித்து இதுவரை வாய் திறக்கவில்லை. ஆனால் ‘காப்பான்’ நிகழ்ச்சியில் அதுகுறித்துப் பேசாமல் இருந்தால் பலத்த விமர்சனங்களைச் சந்திக்கவேண்டி வரும் என்பதால் கண்டிப்பாக பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.