சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் ‘தலைவர் 168’படமே இன்னும் தொடங்காத நிலையில் அவரது அடுத்த பட இயக்குநரையும் முடிவு செய்துவிட்டார் என்று சொன்னால் நம்புவதற்குக் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். ஆனால் அது ரஜினியின் நீண்டகாலக் கனவுபடமும் கூட.யெஸ் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி ரஜினி கூட்டணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

2021 தேர்தல் வரை மிக பிசியாக நடிக்கவிரும்பும் ரஜினி, கார்திக் சுப்பாராஜ், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட சில இயக்குநர்களிடம் தொடர்ந்து கதைகேட்டே வருகிறார். தற்போது சிவா இயக்கும் படம் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. ஆனால் சில லேட்டஸ்ட் தகவல்கள் ரஜினி எஸ்.எஸ்.ராஜமவுலியுடன் இணையவிருப்பதை உறுதி செய்கின்றன.

‘பாகுபலி’பட ரிலீஸுக்கு முன்பிருந்தே எஸ்.எஸ்.ராஜமவுலியின் இயக்கத்தில் தமிழ்,தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க வெளிப்படையாகவே விருப்பம் தெரிவித்திருந்தார் ரஜினி. ராஜமவுலிக்கும் ரஜினி படத்தை இயக்க விருப்பம் என்றாலும் சந்தர்ப்பம் கூடி வரவில்லை. தற்போது நடந்த ஒரு சந்திப்பில் தான் இயக்கிவரும் ‘ஆர் ஆர் ஆர்’படத்துக்கு அடுத்து ரஜினியை இயக்க ஒப்புதல் தெரிவித்திருக்கிறார். அவர் சொன்ன தேதிகளுக்கு முன்பே சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படமும் முடிந்து விடும் என்பதால் மிக உற்சாகமாக டபுள் ஓகே சொல்லியிருக்கிறார் ரஜினி. இந்தக் கூட்டணியில் படம் உருவாகும் பட்சத்தில் இந்தியாவின் அத்தனை மொழிகளிலும் வெளியிட வாய்ப்பிருப்பதால் மெகா மெகா பட்ஜெட் படமாக உருவாக வாய்ப்புண்டு.