'விசாகனால் வீணா போச்சு என்று ஒரு இடத்திலும் நான் சொல்லவில்லை. பெரிய இடத்தில் இருக்கும் ஒருவரை கேவலமாக பேசி புகழ் பெற வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை’ என்று ரஜினியின் மருமகன் விசாகன் குறித்து இயக்குநர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இயக்குநர் ‘மூடர் கூடம்’ நவீன்.

படங்களில் நடிக்கத் துவங்குவதற்கு முன்னரே பரபரப்பான தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கத் துவங்கிவிட்டார் ரஜினியின் இளைய மருமகன் விசாகன்.’மூடர் கூடம்’ பட இயக்குநர் நவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’அலாவுதீனின் அற்புத கேமரா’. இந்தப் படத்தில் நவீனுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். முழுக்க முழுக்க வெளிநாட்டில் படமான இதில் பிக் பாக்கெட் அடிப்பவராக நடிகை ஆனந்தி நடித்துள்ளார். இந்தப் படத்தின் ரிலீஸுக்கு தடைகோரியுள்ளார் ஃப்ளாஷ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் சொர்ணா சேதுராமன். இவர் சௌந்தர்யா ரஜினிகாந்தின் கணவர் விசாகனின் தாய்மாமன் ஆவர். 

ரஜினி மகளைத் திருமணம் செய்வதற்கு முன்பு சின்னச்சின்ன வேடங்களில் தலைகாட்டி வந்த விசாகனை நாயகனாக வைத்து ஒரு படம் இயக்க இயக்குநர் நவீனை நாடியுள்ளார் சொர்ணா சேதுராமன். அதற்காக அட்வான்ஸாக ரூ.50 லட்சத்தைப் பெற்றுக் கொண்டு படம் இயக்காமல் காலம் தாழ்த்தியதாக இயக்குநர் நவீன் மீது தற்போது குற்றசாட்டு எழுந்துள்ளது. அதே சமயத்தில் தன்னிடம் பெற்ற பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு அலாவுதீனின் அற்புத கேமரா படத்தை ரிலீஸ் செய்யவேண்டும் என்று கூறி தடைகோரியுள்ளார் சொர்ணா சேதுராமன்.

இந்நிலையில் இது குறித்து பிரபல வார இதழுக்கு பேட்டியளித்திருக்கும் நவீன், 'நான் விசாகனுக்கு கதை சொன்னவுடன் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஒப்பந்தமாகி தொடர்ந்து 9 மாதங்கள் படத்துக்காக வேலை செய்தேன். அவரிடம் வாங்கிய அட்வான்ஸ் தொகையில் படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டேன். தன்னிடம் அட்வான்ஸ் பெற்றுக்கொண்டு படம் இயக்காமல் ’அலாவுதீனின் அற்புத கேமரா’ படத்தை இயக்கியிருப்பதாக கூறியும், தன்னிடம் பெற்ற பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதும் தான் சொர்ணா சேதுராமன் வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது. 

ஆனால் படம் நின்று போனதற்கான காரணத்தை நான் வெளியில் சொல்ல விரும்பவில்லை. இது எதற்காக நின்று போனது என்பது படத்தில் சம்பந்தப்பட்டிருக்கிற எல்லோருக்கும் தெரியும். தயாரிப்பு தரப்பில் எந்தப் பிரச்னையும் நடக்காமல் இருந்திருந்தால், குறிப்பிட்ட தேதியில் இப்படம் தொடங்கியிருக்கும். 

’அலாவுதீனின் அற்புத கேமரா’ படத்தின் கதைக்கும் நான் விசாகனுக்குச் சொன்ன கதைக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. இது அவருக்கும் தெரியும். என்னுடைய தரப்பில் நியாயம் இருக்கிறது. நிச்சயம் நீதி வெல்லும்'. அதே சமயம் அந்தப்பேட்டியில் ’விசாகனால் வீணா போச்சு என்று ஒரு இடத்திலும் நான் சொல்லவில்லை. பெரிய இடத்தில் இருக்கும் ஒருவரை கேவலமாக பேசி புகழ் பெற வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை. முழு இண்டர்வியூவை பாருங்கள். உண்மை தெரியும்’ என்று விளக்கமளித்துள்ளார் நவீன்.