இணையங்களில் சில சமாச்சாரங்களை முன்கூட்டியே ரிலீஸ் செய்வதில் அப்படி என்ன இன்பம் இருக்கிறதோ தெரியவில்லை. இன்று காலை 11 மணிக்கு ரிலீஸாவதாக இருந்த ‘பேட்ட’ படத்தின் ட்ரெயிலர் காட்சிகள் முன்கூட்டியே ரிலீஸாகியிருக்கின்றன.

நடிகர் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'பேட்ட' திரைப்படத்தின் ட்ரைலர் இன்று காலை 11 மணிக்கு வெளியாவதாக சன் பிக்சர்ஸ் சார்பில் நேற்று  அறிவிக்கப்பட்டிருந்தது . இதனால் மிகுந்த உற்சாகத்திலும், எதிர்பார்ப்பிலும் இருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். 

இந்நிலையில் ட்ரைலரில் இடம் பெற்றிருக்கும் 11 வினாடி கொண்ட ரஜினியின் மாஸான பஞ்ச் டயலாக் ஒன்று இணையத்தில் 'லீக்காகி' இருப்பதால் அதிர்ச்சியில் இருக்கிறார்கள் படக்குழுவினர்.  இதில் ‘அப்படியே ஓடிரு கொலவெறியில இருக்கேன்’என்று ரஜினி பேசும் வசனம் இடம்பெற்றுள்ளது.
 
'பேட்ட' திரைப்படத்தை இயக்குநரும் ரஜினிகாந்தின் தீவிர ரசிகருமான கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கிறார். இதில் ரஜினியுடன் இணைந்து விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், சசிகுமார், மகேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். 

ரஜினியின் 165-வது திரைப்படமான இதனை சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது. அனிருத் இசையமைத்திருக்கும் 'பேட்ட' திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.