சில வாரங்களுக்கு முன் பரபரப்பாக கிசுகிசுக்கப்பட்ட ரஜினியின் அடுத்த பட இயக்குநர் குறித்த செய்தி ஏறத்தாழ உறுதியாகும் நிலைக்கு வந்துவிட்டது. அஜீத்தின் ஆஸ்தான இயக்குநர் சிறுத்தை சிவா ரஜினி படத்தை இயக்கவிருப்பது உறுதியாகியுள்ளது.

‘தர்பார்’படத்தின் இரண்டாவது ஷெட்யூலுக்குக் கிளம்பும் முன்னர் மோடியின் பதவியேற்புக்குச் செல்லவேண்டிய பரபரப்பான சூழ்நிலையிலும் ‘விஸ்வாசம்’ பட இயக்குநர் சிவாவை தனது போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சந்தித்துப் பேசியது அப்போது  கோடம்பாக்கத்தின் பரபரப்பான செய்தியானது.சிவா அடுத்தபடியாக ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்கவிருப்பதாக அதற்கு  சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. அச்செய்தி வெளியான சில தினங்களிலேயே ஞானவேல் ராஜாவின் ‘மிஸ்டர் லோக்கல்’ படம் படம் தோல்வி அடைந்ததால் சூர்யா-சிவா படத்தைத் தொடங்குவதில் பண நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்தன.

இந்நிலையில் சூர்யாவின் இயக்குநர் சிவா ரஜினியை அவர் இல்லத்தில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சந்தித்தது பெரும் கேள்விக்குறியாகியிருந்தது. ரஜினி-சிவாவின் சந்திப்பில் அவரிடம் ரஜினி தனது அடுத்த படத்துக்கான கதை கேட்டிருப்பதாகவும் ‘பேட்ட’ படத்தோடு ரிலீஸாகி அதகளம் செய்த ‘விஸ்வாசம்’ டைரக்டரை வைத்தே அஜீத்தை விட தான் எவ்வளவு பெரிய வசூல் மன்னன் என்று காட்டவேண்டும் என்று ரஜினி முடிவு செய்திருப்பதாகவும் சில யூகங்கள் நிலவிவந்தன.

 கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் கே.எஸ்.ரவிக்குமார், ஹெச்.வினோத், கார்த்திக் சுப்பாராஜ் ஆகிய மூன்று  இயக்குநர்களிடம் மும்முரமாகக்  கதை கேட்ட ரஜினி இறுதியாக சிவாவை டிக் அடித்துவிட்டதை அவரது வட்டாரம் உறுதி செய்துள்ளது.