அமித் ஷாவின் இந்தி மொழித் திணிப்புக்கு விளக்கம் கொடுத்து ரஜினி அளித்த ரெண்டுங்கெட்டான் பேட்டி சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையாகியிருக்கிறது. இனியாவது எது குறித்தாவது கருத்துச் சொன்னால் அதில் இரட்டை வேடம் போடாமல் தெளிவான ஒரு பதிலை அவர் சொல்ல வேண்டும் என்று அவரது ரசிகர்களே கூ ட கிண்டலடித்து வருகின்றனர்.

கடந்த வாரம் இந்தி மொழியை நாட்டின் பொது மொழியாக்க வேண்டும் என்ற ரீதியில் அமித்ஷா பதிவிட்டது சர்ச்சையானது. அதுபற்றி நேற்று  கடைசி நபராகக் கருத்துச்சொன்ன ரஜினி,’ எந்த நாடாக இருந்தாலும் பொதுவான மொழி என ஒன்று இருந்தால் அது அந்த நாட்டின் வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் நல்லது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக நமது நாட்டில் அப்படி ஒரே மொழியை கொண்டு வர முடியாது. இந்தி மொழியை நாட்டின் பொதுமொழியாக கொண்டு வர முடியாது. இந்தியை திணித்தால் தமிழ்நாடு மட்டும் அல்ல, தென் இந்திய மாநிலங்கள் ஏன் வட இந்திய மாநிலங்களிலே கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’ என்று கூறினார்.

ரஜினியின் இந்த கருத்து அவர் இந்தி திணிப்புக்கு ஆதரவா? எதிர்ப்பா என்பதை புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு இருந்தது.அதனால் குழப்பமடைந்த நெட்டிசன்கள் ரஜினி மேட்டரில் கமலையும் வம்பிழுத்து ‘கடவுள்னு ஒருத்தர் இல்ல. ஆனா இருந்திருந்தா நல்லாருக்கும்’என்ற கருத்து போலவே இருக்கிறது என்று கிண்டலடித்தனர்.

மேட்டர் அத்தோடு முடியவில்லை. பொதுப்பிரச்சினைகளில்  ரஜினி நீண்டகாலமாகவே  முக்கிய வி‌ஷயங்களுக்கு தெரிவித்த இதுபோன்ற கருத்துகளை ஒன்றாக இணைத்து சமூகவலைதளங்களில் விமர்சிக்கிறார்கள். கட்சி தொடங்குவதாக அறிவித்த போது ஆன்மீக அரசியல் என்று கூறிய ரஜினி பின்னர் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் தாம் பெரியார் வழியில் செல்வதாக கூறினார். தூத்துக்குடி கலவரத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். ஆனால் சென்னை திரும்பியபோது கொடுத்த பேட்டியில் போராட்டத்துக்கு எதிரான கருத்தைக் கூறி ‘இப்படி எதுக்கெடுத்தாலும் போராடினா நாடு சுடுகாடாயிடும்’என்று  தெரிவித்து தமிழக மக்களின் உச்சக்கட்ட எரிச்சலுக்கு ஆளானார்.

இதேபோல் சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழையலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வந்தபோது ‘சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்கிறேன். அதே நேரத்தில் ஐதீகம் பின்பற்றப்பட வேண்டும்’ என்று கூறினார். அடுத்து ‘மீடூ’ விவகாரம் சூடு பிடித்தபோது  அது குறித்த கருத்தின் போது ’மீடூ இயக்கம் பெண்களுக்கு பாதுகாப்பு தருகிறது. அதே நேரத்தில் பெண்கள் அதை தவறாக பயன்படுத்த கூடாது’என்று சின்மயி,வைரமுத்து இருவருக்குமே சப்போர்ட்டாகப் பேசினார்.

கட்சி தொடக்கம் பற்றிய கேள்விக்கு பெரும்பாலான சமயங்களில்  ’கட்சிக்கான 90 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. ஆனால் இப்போதைக்கு இல்லை’ என்றே ரிப்பீட் அடிக்கிறார். இதையெல்லாம் தொகுத்து வலைதளங்களில் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள் ‘சிக்கன் பிரியாணி சுவையாக இருக்கும். ஆனால் கோழியை கொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது’, ‘மழை பெய்தால் நாட்டிற்கு நல்லது... ஆனால் அது மண்டை மீது பெய்தால் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’,’தோழர் ரம்யா பாண்டியனின் இடுப்பு மடிப்பு ரசிக்கும்படி இருக்கு...ஆனா அதை பொதுவெளியில காட்டுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது’ என்று ரஜினி ஸ்டைலில் கிண்டலடித்து வருகிறார்கள்.