ரஜினியின் ‘தர்பார்’பட பப்ளிசிட்டியின் ஒரு பகுதியாக இரு தினங்களுக்கு முன்பு இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் வெளியிட்ட அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு குவிந்துள்ளது. இந்த அழைப்புக்கு செவி சாய்த்து முருகதாஸின் ட்விட்டர் பக்கத்தில் ஃபேன்மேட் போஸ்டர் டிசைனகள் குவிந்த வண்ணமுள்ளன. இதற்கு முன் விஜய்யின் ‘பிகில்’படத்துக்கும் இதுபோன்ற போட்டிகள் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர், முகநூல் பக்கங்களில் ரசிகர்கள் இயக்குநர்கள், மற்றும் தயாரிப்பாளர்களிடம் தங்கள் அபிமான நட்சத்திரங்களின் படம் குறித்த அப்டேட்களைக் கேட்டு நச்சரித்து வருவது தொடர்ந்து நடந்து வருகிறது. சூர்யாவின் ‘என் ஜி கே’படப்பிடிப்பு நடந்தபோது இயக்குநர் செல்வராகவனிடம் சூர்யாவின் ரசிகர்கள் ஒரு பெரும்போரே நடத்திக்கொண்டிருந்தார்கள். அதே நச்சரிப்பு பிகில் படத்துக்கும் தொடரவே அதன் நிர்வாகத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஃபேன் மேட் போஸ்டர்கள் பண்ணி அனுப்புங்கள். சிறப்பானவை விஜய்யின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு கவுரவிக்கப்படும் என்று அறிவித்து அப்டேட் கேட்பவர்களை திசை திருப்பினார்.

தற்போது அதே வழியைப் பின்பற்றியுள்ள இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தர்பார்’பட ரஜினியின் சில புகைப்படங்களை வெளியிட்டு போஸ்டர் டிசைன் பண்ணி அனுப்புங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது வேண்டுகோள் செவிமடுக்கப்பட்டு அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள சில டிசைன்கள் இதோ...