தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் கதாசிரியராகவும் விளங்கியவர் கலைஞானம். கலைஞானத்துக்கு சமீபத்தில் திரையுலகினர் பாராட்டு விழா நடத்தினர். அதில் பிரபலமான நடிகர்கள் பலர் கலந்து கொண்டனர். குறிப்பாக ரஜினிகாந்த், சிவகுமார், இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகர் சிவகுமார் பேசியபோது, கலைஞானம் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அவருக்கு சொந்த வீடு கட்டுவதற்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும்’ என்று கூறினார்.

அந்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, ’அந்த வாய்ப்பை அரசுக்கு தரமாட்டேன். விரைவாக கலைஞானம் அவர்களுக்கு வீடு பாருங்கள். 10 நாட்களுக்குள் பணத்தை தருகிறேன்’ என்று கூறினார். அப்போது வலைதளங்களில் ரஜினியை பலரும் கிண்டல் அடித்தனர். நதி நீர் இணைப்புக்கு ஒரு கோடி தர்றேன்னு சொன்னீங்களே அது மாதிரியா? என்பது போன்ற கிண்டல்கள் அதிகம் இருந்தன.

ரஜினி வீடு வாங்கித்தருவதாகச் சொன்ன  சம்பவம் குறித்து கலைஞானம் கூறுகையில், ’ரஜினிக்கும் எனக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை. அவருடைய முதல் பட வாய்ப்பை நான் அளித்தேன். அவ்வளவுதான். ஆனா எனக்கு எவ்வளவு பெரிய உதவியை ரஜினி செய்துள்ளார். இது அவருடைய பரந்த மனதை வெளிப்படுத்துகின்றது, என்று பாராட்டினார். ஏற்கனவே ரஜினி நடித்து பெரிய வசூலை பெற்ற அருணாச்சலம் திரைப்படத்தில் தன் லாபத்தில் ஒரு பங்கை கலைஞானத்துக்கு அளித்து அவரது வாழ்வை சரிவிலிருந்து மீட்டார். அந்த படத்தில் வந்த லாபத்தை நலிவடைந்த 7 சினிமா பிரபலங்களுக்கு பிரித்து அளித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா 1 கோடி ரூபாய் மதிப்பிலான வீடு ஒன்றை தேடிப்பிடித்ததகாவும், ரஜினி மொத்த பணத்தையும் அளித்து அந்த வீட்டை கலைஞானத்துக்கு பெற்று கொடுத்துள்ளதாகவும் தகவல் பரவியது. ஆனால் உண்மை நிலவரத்தை விசாரித்தால் வீடு தேடிக்கொண்டு இருப்பதாக மட்டுமே  தகவல் வருகிறது. ரஜினி வீடு வாங்கிக்கொடுத்த சம்பவம் இன்னும் நடைபெறவில்லை என்றே தெரிகிறது.