சமீபகாலங்களில் இளம் இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் தங்கள் முத்திரைகளை மிக அழுத்தமாக பதித்து வரும் நிலையில் ‘மாஃபியா’பட இயக்குநரை சூப்பர் ஸ்டார் ரஜினி ‘பிரில்லியண்ட் கண்ணா’என்று பாராட்டியுள்ளதை நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பெருமைப்பட்டுள்ளார். இனி ரஜினியை வைத்துப் படம் இயக்கப்போகும் பட்டியலில் இவரையும் சேர்த்துக்கொள்ளலாம் என்கிற அளவுக்கு இருக்கிறது ரஜினியின் பாராட்டு.

நீண்டகாலமாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை ஒரு ஓரத்திலாவது பிடித்துவிட வேண்டும் என்று போராடிவரும் அருண்விஜய்க்கு சமீபத்தில் வெளியான ‘தடம்’ ஒரு சிறப்பான துவக்கத்தைத் தந்துள்ளது. அடுத்து தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியான ‘சாஹோ’படத்திலும் முக்கிய வேடமேற்றிருந்த அருண் விஜய், தற்போது லைகா புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கும் ‘மாஃபியா’படத்தில் நடித்துள்ளார். `துருவங்கள் பதினாறு' படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்கியுள்ளார். குற்றப் பின்னணியில் த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும், வில்லனாக பிரசன்னாவும் நடித்துள்ளார்கள்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,  தயாரிப்பாளர்களின் சிபாரிசின்பேரில் இப்படத்தின் டீசரை ரஜினிக்கு பிரத்யேகமாக காண்பித்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் நரேன். டீசரை பார்த்த ரஜினி, ’பிரில்லியண்ட் ஒர்க் கண்ணா, செம்மையா இருக்கு’... என்று இயக்குனரையும் மாஃபியா படக்குழுவினரையும் பாராட்டியிருக்கிறார். ரஜினியின் அப்பாராட்டை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அருண் விஜய், ...தலைவரே பாராட்டிவிட்டார். அவர் முழுப் படத்தையும் பார்க்கும் நாளுக்காக ஆவலுடன் வெயிட்டிங்’என்று பதிவிட்டுள்ளார்.

கார்த்திக் நரேன் போன்றே வயதில் மிகவும் இளையவரான லோகேஷ் கனகராஜ்தான் விஜயின் அடுத்த பட இயக்குநர் என்பதும் அஜீத்தின் இரண்டு படங்களை தொடர்ச்சியாக இயக்கிவரும் ஹெச்.வினோத்தும் இளைய தலைமுறை இயக்குநர் என்பதும் குறிப்பிடத்தக்கது.