தனது மகள் திருமணத்தை அனைத்துக் கட்சியினரையும் கூட்டி நடத்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தான் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று எப்போதும் போல் தனது அரசியல் எண்ட்ரியைத் தள்ளிவைத்தார்.

கடந்த வாரம் நடந்த தனது மகள் திருமணத்துக்கு ஆளும் கட்சி முதல் லெட்டர் பேட் கட்சிகள் வரை அனைவருக்கும் அழைப்பு விடுத்து தடபுடல் செய்த ரஜினி சற்றுமுன்னர் வெளியிட்டுள்ள ரஜினி மக்கள் மன்ற அறிக்கையில் ...வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை. சட்டமன்றத் தேர்தல்தான் எனது இலக்கு.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் என் ஆதரவு எந்தக் கட்சிக்கும் இல்லை. ஆகையால் எனது பெயரையோ படங்களையோ எந்தக் கட்சியினரும் பயன்படுத்தக்கூடாது. வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டின் முக்கியப்பிரச்சினையான தண்ணீர்ப் பிரச்சினையை யார் தீர்த்துவைப்பார்கள், யார் நிலையான ஆட்சியைத் தருவார்கள் என்று நம்புகிறீர்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள்’ என்று அறிவித்துள்ளார்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறித்த அறிவிப்பு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும்போது அறிவிக்கப்படும் என்று நம்பப்படுகிறது.