உலக மக்களை ஒட்டு மொத்தமாக அச்சுறுத்தி வரும் கொரோனா பிரச்சனையால் பலர் பொருளாதாரத்தை இழந்து ஒரு பக்கம் தவித்து வரும் நிலையில், பல உயிர்களை  காப்பாற்ற பயன்படும் இரத்தத்திற்கும், தற்போது போடப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்திய அளவில், அனைத்து மாநிலங்களையும் சேர்த்து,  5 கோடி யூனிட் ரத்தம் கையிருப்பு இருப்பது மிகவும் அவசியம்.  ஆனால் தற்போதைய சூழ்நிலையில் வெறும் 1 கோடி யூனிட் மட்டுமே உள்ளது.

இதனால் உடனடி மருத்துவ தேவைக்கு ரத்தம் தேவைப்படுபவர்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக இரத்த மாற்று சிகிச்சை நோயாளிகள், ரத்த சோகை உள்ள கர்ப்பிணி பெண்கள், ரத்த அணு குறைபாடு நோய் உள்ளவர்கள் இந்த ரத்த தட்டுப்பாட்டால் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர். 

இப்படி பாதிக்கப்படுபவர்கள் தேவையை பூர்த்தி செய்ய, இன்னும் 4 யூனிட் இரத்தம் தேவை என்பதை அறிந்து, கர்ப்பிணி பெண்களுக்கும், நோயாளிகளுக்கும் உதவும் நல்லெண்ணத்தில்,  ரஜினி மக்கள் மன்றம் தென் சென்னை (கிழக்கு) மாவட்டம் செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து, அரசாங்கத்தின் உரிய அனுமதி பெற்று மாபெரும் ரத்ததான முகாமை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடத்தியுள்ளனர்.

இதில் ஏராளமான ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகள், மன்ற காவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கியுள்ளனர். 

மேலும் இரத்ததான முகாமில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்த அனைவரும், சானிடைசர் பயன்படுத்தி சுகாதாரத்தை கடை பிடித்தும், முகத்தில் முகமூடி அணிந்து கொண்டும், சமூக வவிலகல் போன்றவற்றை முறையாக பின்பற்றியுள்ளனர்

இரத்த தானம் செய்பவர்களின் ஆரோக்கியத்திற்காக ரஜினி மக்கள் மன்றம் தென்சென்னை (கிழக்கு) மாவட்டம் சார்பாக பழச்சாறு, பிஸ்கட், சாக்லேட், பிரட், வாட்டர் பாட்டில், சானிடைசர், முக கவசம், அரிசி போன்றவற்றை வழங்கினர். 

கொரோனா  அச்சுறுத்தல் ஒரு பக்கம் இருந்தாலும், ரஜினி மக்கள் மன்றத்தின் இந்த உயிர் காக்கும் உதவிக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.