டிசம்பர் 31 ஆம் தேதி தன்னுடைய அரசியல் கட்சி குறித்து அறிவிப்பை வெளியிடுவேன் என தெரிவித்திருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன்னுடைய உடல் நிலை காரணமாக கட்சி துவங்க வில்லை என்பதை அதிகார பூர்வமாக அறிவித்தார். 

தலைவர் அரசியலுக்கு வந்தால், ஆன்மீக அரசியல் மலரும், பல்வேறு மாற்றங்களும், அதிசயங்களும் நிகழும் என காத்திருந்த பல்லாயிர கணக்கான ரசிகர்களுக்கு இது பேரிடியாக அமைந்தது. இந்நிலையில் தற்போது ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பரபரப்பு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்  ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி பிஎம் சுதாகர்.

பலமுறை தலைவர் அரசியல் பற்றி பேசிவிட்டு அமைதியாக இருந்தாலும், இம்முறை சட்டமன்ற தேர்தலை கண்டிப்பாக கட்சி துவங்கி, தேர்தலில் போட்டியிடுவார் என ரசிகர்கள் நினைத்தனர்.  ஆனால் திடீர் என தன்னுடைய உடல்நிலையை காரணம் காட்டி இனி அரசியலுக்கு வரப்போவதில்லை என, மூன்று பக்க அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார் ரஜினிகாந்த். 

இவரது முடிவுக்கு பிரபலங்கள், மற்றும் சில ரசிகர்கள் ஆதரவு தெரிவித்த போதிலும், சில ரசிகர்கள் ரஜினிகாந்தின் இந்த முடிவுக்கு தொடர்ந்து தங்களுடைய எதிர்ப்பையும் தெரிவித்து, ரஜினிகாந்த் வீட்டின் முன்பே போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக ரஜினிகாந்த் வீட்டின் முன்பே ரசிகர் ஒருவர் தீ குளிக்கவும் முயன்றார்.

இந்நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி பிஎம் சுதாகர், பரபரப்பு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த கடிதத்தில், ரஜினி ரசிகர்கள் மன்றத்திற்கும், ரஜினி மக்கள் மன்றத்திற்கும் வணக்கம். நமது தலைவர் தன்னுடைய உடல்நிலை குறித்தும், மருத்துவர்கள் ஆலோசனையை மீறி அரசியலுக்கு வந்தால், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மூலம் தன்னை நம்பி வரும் மக்கள் துன்பப் படக்கூடாது என்ற நல்லெண்ணத்தின் படியும், தாம் அரசியலுக்கு வர முடியாத சூழ்நிலை குறித்தும் தாம் அன்புத் தலைவர் வெளிப்படையான தெளிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதன்பின்னரும் அவரை அரசியலில் ஈடுபட சொல்லி கட்டாயப்படுத்தி, அதற்காக போராட்டங்களில் ஈடுபட போவதாக சில ரசிகர்கள் பேசுவது அவரை மேலும் நோகடிக்கும் செயல். இந்த போராட்டத்திற்கு ஒரு சிலர் அதற்கான செலவுகளுக்கு என்று கூறி நிதி வசூல் செய்வதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது மிகவும் வருத்தம் அளிக்கிறது. தலைவர் மீது அன்பும் அவர் நலனில் அக்கறையும் கொண்ட ரஜினி ரசிகர் மன்ற காவலர்களும், ரசிகர்களும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று தலைமை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.