ராவண தேசத்தைக் கூட ராமன் சிறிது காலம் ஆண்டிருக்கலாம்... தமிழ்த்திரையுலகில் 43 ஆண்டுகளாக எந்த அசைக்க முடியாத சக்தியாக இருப்பவர் ரஜினி மட்டுமே. அவர் எத்தனை வெள்ளைத் ’தல’களை வெடவெடக்க வைத்திருப்பார். தலைவரை எந்தக் கொம்பனாலும் அசைக்கமுடியாது என மார்த்தட்டி வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.

 

விஸ்வாசம்- பேட்ட மோதல் இத்தனை சூட்டைக் கிளப்பும் என அவர்களது ரசிகர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். விஸ்வாசம் வசூல் அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்த உஷ்ணத்தில் இருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். ‘’ ஒரு படத்தை வைத்து ரஜினியின் அஸ்திவாரத்தை அசைத்துப்பார்த்து விட்டதாகக் கூறக்கூடாது. 43 ஆண்டுகளில் அவர் படைத்த சாதனைகளை பார்க்க வேண்டும். தமிழ் சினிமா உலகில் பல காலமாக ரஜினி தான் தல நட்சத்திரம்’’ என்கிற அவரது ரசிகர்கள் அந்தப் படியலையும் அடுக்குகிறார்கள்.

 

’’சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 43 ஆண்டுக்காலத் திரைப் பயணத்தில் அவரது 176-வது படம் பேட்ட.176 படங்களில், தமிழில் 116, இந்தியில் 29, தெலுங்கில் 17, கன்னடத்தில் 10, மலையாளத்தில் 2, வங்கம், ஆங்கிலத்தில் தலா ஒரு படம். தமிழில் வெளியானதில் 25 படங்கள் தமிழ் சினிமாவையே புரட்டிப்போட்ட சாதனைப் படங்கள்.  சிகப்பு தோல்காரர்கள் ஆதிக்கம் செலுத்திய  சினிமா உலகில் கருப்பும் அழகுதான்  என நிரூபித்து  இத்தனை ஆண்டுகாலம் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார் ரஜினி. எத்தனையோ நடிகர்கள் அவ்வப்போது தோன்றி மறைந்தாலும் ரஜினி எப்போதுமே உட்ச நட்சத்திரம் தான்.  

ரஜினிகாந்துக்கு தோல்வி படங்கள் என்று கூறப்படும் படங்களே மற்றவர்களின் வெற்றிப் படங்களுக்கு இணையான வசூலை குவித்து விடும். சந்திரமுகியின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஆயிரம் பேர் முன்னிலையில் "நான் யானை இல்ல.. குதிரை. கீழ விழுந்தா டக்குனு எழுந்திருப்பேன்" என உணர்ச்சி போங்க பேசினார் ரஜினி உண்மையும் அதுதான். 

ஆங்கிலப் படங்களை காப்பி அடித்து நம்மூரில் பேர் வாங்கிக் கொள்ள நினைக்கும் நடிகர்களுக்கு மத்தியில், தமிழ் படத்தை உலகெல்லாம் பார்க்க வைத்த பெருமை ரஜினியை மட்டுமே சேரும். பல நாடுகளில் ரசிகர்களை வைத்திருப்பதும் அவர் மட்டுமே.  சினிமா கருப்பு வெள்ளையில் துவங்கி  கலர் படங்கள், டிஜிட்டல் சினிமா, 3டி, மோஷன் கேப்சர் என பல வடிவங்களில் பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது. இந்த எல்லா வளர்ச்சியிலும் இந்த மனிதர் இருந்துள்ளார் என்றால் அது தான் சாதனை. 69 வயது வரை ஹீரோவாக நடித்து வருவது உலகில் இவர் மட்டுமே. இந்தியாவில் அதிக பட்ஜெட் படத்தில் நடித்த பெருமை இவருக்கு மட்டுமே உண்டு. 1978ல் ஒரே ஆண்டில் 21 படங்களில் நடித்த சாதனையை உலகில் எவரும் நிகழ்த்தி இருக்க முடியாது. 

தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்பட்டு உலகம் முழுவது ரசிகர்களை கொண்டிருந்தாலும் ரஜினிகாந்த் இதுவரை ஜவுளிக்கடை, நகைக்கடை போன்ற விளம்பரங்களில் நடித்தது இல்லை. அவர் நடித்த ஒரே விளம்பரம் "கண் தானம்" பற்றிய விளம்பரம் மட்டுமே..! விஸ்வாசம் படத்திற்கு கொஞ்சமும் சளைத்ததல்ல பேட்ட படம். சிலர் ரஜினிக்கு எதிராக பேட்ட படத்தை பற்றி உண்மைக்கு மாறாக பரப்பி வருகிறார்கள். இன்னும் எத்தனை வெள்ளைத் ’தல’கள் வந்தாலும் ரஜினியின் இடத்தை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது’ என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.