நடிகா் கமலை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினாா் நடிகா் ரஜினிகாந்த். இச்சந்திப்பு சுமார் ஒன்றரை மணி நேரம் வரை நடைபெற்றது.
கமலுக்கு காலில் பலத்த அடிபட்டு கடந்த ஜூன் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்த அவரை, திரையுலகினர் தொலைபேசி வாயிலாகவே நலம் விசாாித்தனா்.
செவாலியே விருது அறிவிக்கப்பட்ட உடன், திரையுலகினர் சிலர் நேரில் சந்தித்து வாழ்த்து சொன்னார்கள். இந்நிலையில் நடிகா் ரஜினிகாந்த் '2.0' படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வந்ததாலும், அமெரிக்காவில் சிகிச்சைக்கு எடுக்கச் சென்றதாலும் கமலை சந்திக்கவில்லை என்றும், தொலைபேசியிலே இருவரும் பேசினார்கள் என்று தகவல்கள் வெளியானது.

கமல் பிறந்த நாளுக்குப் பிறகு, ரஜினி - கமல் சந்திப்பு சென்னையிலுள்ள ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போதும் கமல் அலுவலகத்தில் நெருங்கிய ஊழியர்கள் மட்டுமே இருந்திருக்கிறார்கள். இருவருக்குமான சந்திப்பு குறித்து விசாரித்த போது, "அவ்வப் போது ரஜினி - கமல் இருவருமே சந்தித்துக் கொள்வது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால், சமீபகாலமாக இருவரும் சந்திக்கவில்லை. சிகிச்சை, '2.0' படப்பிடிப்பு என அனைத்தும் முடிந்தவுடன் கமலை, ரஜினி சந்தித்தார் என கூறப்படுகிறது.
அப்போது கமலுக்கு எப்படி அடிப்பட்டது, என்ன சிகிச்சை எடுத்துக் கொண்டார் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் ரஜினி கேட்டு தெரிந்து கொண்டார். ரஜினிக்கு மேற்கொள்ளபட்ட அமெரிக்க சிகிச்சை குறித்து கமல் கேட்டு தெரிந்து கொண்டார். நீண்ட நாட்கள் கழித்து இருவருமே சந்தித்ததால், இச்சந்திப்பு சுமார் ஒன்றரை மணி நேரம் வரை நீண்டது.
