ரஜினி நடிக்கும் காலா படத்திற்கு ரூ.160 கோடி பட்ஜெட் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் காலா. ரஜினியுடன் இணைந்து ஹூமா குரேஷி, சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், நானா படேகர், சுகன்யா ஆகியோர் பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாரயணன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

தமிழகத்தில் இருந்து மும்பைச் சென்று அங்கு தாதாவாக வளர்ந்த ஒருவரின் கதை தான் காலா. இதன் முதல் கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் நடந்தது. இதன் 2-ஆம் கட்ட படப்பிடிப்பு சென்னை, மும்பை தாராவி செட்டில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடிக்கு மேல் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது படத்தின் பட்ஜெட் ரூ.160 கோடி என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

காலா படத்தின் தலைப்பு மற்றும் கதை என்னுடையது என்று சென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்த கே.ராஜசேகரன் தொடர்ந்த வழக்கில் இயக்குனர் பா.ரஞ்சித், தயாரிப்பாளர் தனுஷ் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், “காலா படம் ரூ.160 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது, அடுத்த ஆண்டு இப்படம் வெளிவரயிருக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.