தான் ஆடாவிட்டாலும் தன் சதையாடும் என்பார்களே அதுபோல் ரஜினி அமைதியாக இருந்தாலும் அவரது மக்கள் மன்றத்தினர் அவ்வப்போது பொதுச்சேவைகளில் ஈடுபட்டு தங்கள் தலைவரை அரசியலுக்குக் கொண்டுவர முயற்சிக்கின்றனர். அதன் ஒரு தொடர்ச்சியாக இன்று, கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 ஏழை குடும்பத்தினருக்கு வீடு வழங்கினார் ரஜினி.

நடந்து முடிந்த கஜா கோரப்புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மக்கள் இன்றுவரை சகஜ வாழ்க்கைக்குத் திரும்ப முடியவில்லை. புயல் கோரமாகத் தாண்டவமாடியபோது கமல் உட்பட பல திரையுலக நட்சத்திரங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விசிட் அடித்து தங்களால் இயன்ற உதவிகளைச் செய்தனர். அப்போது பிசியாக இருந்த ரஜினி கடைசி வரை கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் விஜயம் செய்யவில்லை. அதுகுறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இருப்பினும் ரஜினி மக்கள் மன்றத்தினர் அந்த சமயத்தில் மற்ற அமைப்புகளுக்கு இணையாகக் களத்தில் இறங்கி சேவைகளில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக மிகவும் பாதிக்கப்பட்ட 10 ஏழைக்குடும்பங்களுக்கு, தாங்கள் பொதுமக்களிடமிருந்து வசூலித்த பணங்கள் மூலம், வீடு கட்டி முடித்திருந்தனர். அவை அந்த ஏழை ஜனங்கள் குடியேற தயாரான நிலையில், இன்று ரஜினியின் கையால் சாவிகளைப் பெறுவதற்காக அவர்கள் போயஸ் இல்லத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அம்மக்கள் மத்தியில் அமர்ந்து சிறிது நேரம் உரையாடிய ரஜினி பின்னர் அவர்கள் கையில் சாவியை ஒப்படைத்தார். இதனால் டெல்டா பகுதியில் ரஜினியின் அரசியல் செல்வாக்கு உயர்ந்துள்ளது என்று கூறப்படுகிறது.