தமிழக தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், தேர்தலில் இருந்து ஒதுங்கியிருக்கும் ரஜினிகாந்தின் விருப்பப்படி அவரது அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு தேர்தல் சமயத்தில் மும்பையில் துவங்கவிருப்பதை படக்குழு இன்று அதிகாரபூர்வமாக உறுதி செய்தது.

’பேட்ட’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த படக்குழு, தற்போது படப்பிடிப்புக்கு முழுமையாக தயாராகி விட்டது.இதன் படப்பிடிப்பு ஏற்கனவே திட்டமிட்டபடி  ஏப்ரல் 10-ந் தேதி மும்பையில் படப்பிடிப்பு தொடங்குகிறது. முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஏற்கெனவே வெளியான ‘துப்பாக்கி’ படம், மும்பையை கதைக் களமாகக் கொண்டு உருவாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. ரஜினியின் ‘பேட்ட’ படத்துக்கும் முருகதாசின் ’கத்தி’ படத்துக்கும் இசையமைத்த அனிருத், இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார். ‘தளபதி’ படத்துக்குப்பின் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்துக்கு  சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

ரஜினிகாந்த் வழக்கமாக தேர்தல் நடக்கும் சமயத்தில் வெளியூரில் இருப்பார். பிரசாரத்துக்கு அழைப்பதற்காகவோ ஆதரவு கேட்டோ அரசியல் நண்பர்கள் நெருக்கடி கொடுப்பார்கள் என்பதற்காகவே தேர்தலுக்கு முன்பே தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவித்துவிட்டு ஏதேனும் ஒரு வேலையில் பிசியாகிவிடுவார்.அப்படி இந்த தேர்தலில் தனது ஆதரவு யாருக்கும் இல்லை என்று அறிவித்தவர், தேர்தல் சமயத்தில் படப்பிடிப்பை மும்பையில் தொடங்குவதன் மூலம் கிரேட் எஸ்கேப் ஆகியிருக்கிறார். 

 இந்த ஷெட்யூல் தொடர்ச்சியாக  60 நாட்கள் நடக்கவிருப்பதால் தேர்தல் நடக்கும் நாளான ஏப்ரல் 18ம் தேதி தனது வாக்கைச் செலுத்திவிட்டு மீண்டும் மும்பைக்கு பறந்துவிடுவார் சூப்பர் ஸ்டார். ஆனால் இயக்குநர், ஒளிப்பதிவாளர் போன்ற முக்கியஸ்தர்கள் தவிர்த்து மற்ற  படப்பிடிப்பு குழுவினர் யாரும் வாக்களிக்க வரமாட்டார்கள்.