80 மற்றும் 90 - களில் தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை தேர்வு செய்து நடித்து அதில் வெற்றி கண்டவர் நடிகர் ராமராஜன். ஆரம்ப காலங்களில் இவருடைய படங்கள் மற்றும் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் விமர்சிக்கப்பட்டாலும் பின்பு ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினி-க்கு அடுத்தபடியாக வசூல் சாதனை செய்த ஹிட் படங்களை கொடுத்து, உச்ச நடிகராக இருந்தார் ராமராஜன். 

பிரபல நடிகை நளினியை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். பின் ஒருசில கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்தனர். ஆனால் தற்போது இருவரும் நட்பு ரீதியாக பழகி வருவதாக சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் நடிகை நளினி தெரிவித்திருந்தார்.

நடிகர் என்பதையும் தாண்டி, அதிமுக கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்டு திருச்செந்தூர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். மேலும்  சில படங்களை தயாரித்து நடித்தார்.  இந்த படங்கள் படுதோல்வி அடைந்ததால் பொருளாதார சிக்கலில் சிக்கினார். அதே போல் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பெரும் விபத்தில் சிக்கினார். இது இவருடைய திரைப்பட வாழ்க்கையையே திருப்பி போட்டது. விபத்து நடைபெறுவதற்கு முன்பு ஹீரோவாக மட்டுமே நடித்த இவர் இந்த விபத்துக்கு பின் எந்த படங்களிலும் நடிக்க வில்லை.

இந்நிலையில் தற்போது ராமராஜன் உடல் நன்கு நலம் பெற்று சகஜ நிலைக்கு திரும்பி உள்ளதால், இவரை குணச்சித்திர வேடங்களில் நடிக்க வைக்க சில இயக்குனர்கள் அணுகிவருகிறார்களாம். ஆனால் ராமராஜனோ நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன்... குணச்சித்திர வேடத்தில் நடிக்க மாட்டேன் என்பது போல் கூறி, வரும் வாய்ப்புகளை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது. இவருடைய பேச்சை கேட்டு சில இயக்குனர்கள் அப்பீட் ஆகி விடுகிறார்களாம் . இன்னும் சிலர் உங்களுக்கு ஏற்றது போல் கதை தயார் செய்து வருகிறேன் என கூறி அங்கிருந்து நைஸ்சாக நழுவுகிறார்களாம்.