பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருமே தற்போது மிகவும் பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில் இது வரை மாடலிங் துறையில் இருந்த போது பலராலும் அறியப்படாத ஆரவ் மற்றும் ரைசா இருவருக்கும் பல படங்களில் நடிக்க தற்போது வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் அனைவருடைய மனதையும் கொள்ளை கொண்ட ஓவியா, தற்போது நடிகர் லாரன்ஸ் இயக்கி நடிக்கவுள்ள 'காஞ்சனா 3 ' படத்தில் கதாநாயகியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். அதே போல் ஆரவ் 'சிலம்பாட்டம்' படத்தை இயக்கிய இயக்குனர் சரவணன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். மேலும் அனைவரிடத்திலும் கெட்ட பெயரை மட்டுமே வாங்கிக்கொண்டு சென்ற ஜூலி பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக மாறியுள்ளார். 

இந்நிலையில் நடிகர் ஹரீஷ் கல்யாண் மற்றும் ரைசா ஆகிய இருவரும் இணைந்து  ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளனர். இந்தப் படத்தை 'கிரகணம்' படத்தை இயக்கிய இளன் இயக்க உள்ளார். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இந்தப் படத்தில் முதல் பார்வை நவம்பர் மாதம் 5 ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.

உண்மை காதலில் கிசுகிசுக்கப்பட்ட ஓவியா மற்றும் ஆரவ் ஆகிய இருவரும்தான் முதலில் ஜோடி சேர்வார்கள் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில். ரைசா மற்றும் ஹரீஷ் ஜோடி முதலில் இணைந்துள்ளது.