இசையுலகில் பரம எதிரிகள் போல் பார்க்கப்பட்ட இளையராஜாவும் ஏ.ஆர். ரஹ்மானும் ‘ராஜா 75 நிகழ்ச்சிக்கு ஒரே மேடையில் தோன்றி ரசிகர்களைப் பரவசப்படுத்தினர். ரஹ்மான் தனது குரு பக்தியை சரியான நேரத்தில் சரியான இடத்தில் வெளிப்படுத்தி பலத்த கைதட்டல்களைப் பெற்றார்.

பாலுமகேந்திராவின் ‘மூன்றாம் பிறை’ தொடங்கி சுமார் 500 படங்கள் வரை இளையராஜாவுக்கு கீ போர்ட் வாசித்தவர் ரஹ்மான். பின்னர் ராஜாவை விட்டு வெளியேறிய ரஹ்மான் ‘ரோஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தனிப் பாதை போட்டுக்கொண்டார்.

 நேற்று துவங்கிய ‘ராஜா 75’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ‘புன்னகை மன்னன்’ பட தீம் மியூசிக்கை இசைஞானி முன்னிலையில் வாசித்த ரஹ்மான் ராஜா குறித்துப் பேசுகையில், இளையராஜா எனக்கு தலைமை ஆசிரியர் மாதிரி. அவரிடம் நான் ஒழுக்கம் கற்றுக்கொண்டேன். தனது வாழ்க்கையை தவம் மாதிரி அமைத்துக்கொண்டார். எப்படி வாழ வேண்டும் என்பதை அவரிடம்தான் கற்றேன். மேதைகள் மற்றவர்களை அவ்வளவு சீக்கிரம் பாராட்ட மாட்டார்கள். ஆனால் இளையராஜாவிடம் நான் பாராட்டையும், ஆசிர்வாதத்தையும் வாங்கி இருக்கிறேன். எனது இசைக்கு அடித்தளம் ’என்று தனது மனதின் அடியாளத்திலிருந்து குரு பக்தியை வெளிப்படுத்தினார்.

பின்னர் பேசிய ராஜா, “ஏ.ஆர்.ரகுமான் அவரது அப்பாவிடம் இருந்த காலத்தை விட என்னுடன் அதிக காலம் இருந்தார். என்னிடம் 500 படங்கள் பணியாற்றி இருக்கிறார்” என்றார். இந்த உறவு இன்னும் வளர்ந்து எம்.எஸ்.வியும் ராஜாவும் இணைந்து பணியாற்றியதுபோல் இருவரும் இணைந்து ஒன்றிரண்டு படங்களுக்காவது பணியாற்றவேண்டும் என்பது இசை ரசிகர்களின் விருப்பம்.