பெருமழையால் கேரளத்தையே புரட்டி போட்டிருக்கிறது இயற்கை.  உயிர் சேதம் , பொருள் சேதம் என பேரிடர்களை சந்தித்து அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தற்போது மீண்டுவருகிறது கேரளம். எத்தனையோ மக்கள் தங்களின் பல ஆண்டு உழைப்பு ஒன்றுமில்லாமல் போனதை பார்த்து கலங்கி நிற்கின்றனர். தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த வெள்ளத்தில் இருந்து கேரளம் மீண்டு வருவதற்கு தங்கள் ஆதரவு கரத்தை நீட்டி இருக்கின்றனர் உலகின் பல்வேறு பகுதியில் உள்ள சகோதர சகோதரிகளும்.

சின்ன சின்ன குழந்தைகள் கூட தங்களின் சேமிப்பில் இருந்து கேரளத்திற்கு உதவி இருக்கும் நெகிழ்ச்சியான தருணங்களுக்கு இடையே பல்வேறு பிரபலங்களும் தங்களால் ஆன உதவிகளை செய்து வருகின்றனர். இராகவேந்திரா சுவாமிகளின் பெயரில் பல தொண்டுகளை செய்துவரும் ராகவா லாரன்ஸ் , இது போன்ற தருணங்களின் தன்னாலான உதவிகளை செய்வது வழக்கம்.அதிலும் அவர் பணம் கொடுப்பதுடன் நின்றுவிடாமல் தொடந்து சம்பவ இடத்திற்கு சென்று தன்னாலான உதவிகளையும்,செய்வார். 

இதை தான் கேரள வெள்ள நிவாரணத்தின் போதும் செய்யவிருக்கிறார் ராகவா லாரன்ஸ். கேரள முதல்வரின் அனுமதியுடன் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்து அவர்களுக்கு சேவை செய்ய சனிக்கிழமை அன்று அங்கு செல்ல இருக்கு அவர், தன்னுடைய டிவிட்டரில் பின்வருமாறு தெரிவித்திருக்கிறார். 

நம் சகோதர சகோதரிகள் கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கஷ்டப்படுவது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. என்னாலான உதவியாக 1 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறேன். மேலும் அங்கு நேரில் சென்று உதவ மழை வெள்ளம் காரணமாக  அப்போது அனுமதி கிடைக்கவில்லை . அதனால் சனிக்கிழமை அங்கு நேரில் சென்று என்னாலான சேவைகளை செய்ய உள்ளேன் என தெரிவித்திருக்கிறார். அவரின் இந்த உதவியை ரசிகர்கள் பலரும் மனமாற பாராட்டி இருக்கின்றனர்.