பிரபல நடிகராக ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கும் முன்பே, சிறந்த நடன இயக்குனராக ரசிகர்களால் அறியப்பட்டவர் ராகவா லாரன்ஸ். காஞ்சனா படத்திற்கு முன்பு இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு பெறவில்லை என்றாலும், முனி படத்தின் இரண்டாவது பாகமாக வெளியான காஞ்சனா படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று அவருடைய திரைப்பட வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. 

தற்போது முன்னணி நடிகராக இருக்கும் இவர், சில படங்களுக்கு நடன இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார். மேலும் தன்னுடைய அறக்கட்டளை மூலம் உயிருக்காக போராடி வரும் பல குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்கு உதவி வருகிறார். அதே போல் சமூக அக்கறை கொண்ட செயல்களிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் அவருக்கு அன்னை தெரசாவின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னை தெரசா விருது கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன் சிகரெட், மது என எந்த பழக்கமும் இல்லை எனக்கூறினார்.

நடன இயக்குனரான பின் நண்பர்களின் வற்புறுத்துதலால் எப்போதாவது மது அருந்துவேன். இப்போது அதுவும் இல்லை.

ஆனால் மிகவும் டென்சனான நேரத்தில் கொஞ்சம் ஒயின் அருந்துவேன். இனி இந்த விருதை பெற்றதற்கு மரியாதை கொடுக்கும் விதமாக ஒயின் கூட அருந்தக்கூடாது என முடிவெடுத்து விட்டேன் என கூறியுள்ளார்.