பெற்றெடுத்து, பாராட்டி, சீராட்டி, படிக்க வைத்து கஷ்டப்பட்டு வளர்த்த பிள்ளைகள் சிலர், வளர்த்து ஆளாகியதும் பெற்றோரை, முதியோர் இல்லங்களிலும், தெருவில் விட்டு செல்லும் அவலமும் அரங்கேறி வருகிறது.

இப்படி மனசாட்சியை தொலைத்து நடந்து கொள்ளும் பிள்ளைகளால் விடப்படும், தாய் - தந்தையரை காப்பாற்றுவதற்காக 'தாய்' என்ற புதிய அமைப்பை துவங்கியுள்ளார் ராகவா லாரன்ஸ்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை, "கல்மனம் படைத்த சிலரால் பெற்றோர் அனாதை இல்லங்களிலும், சாலை ஓரங்களிலும், குப்பை மேடுகளிலும், குடியிருக்கும் அவலங்கள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.  இவர்களை போன்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஈன்றெடுத்த தெய்வங்களை அவர்களின் இறுதி காலம் வரை கண்கலங்காமல் வைத்து காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு தாய் என்னும் விழிப்புணர்வு சேவையை தொடங்கி, தமிழகம் முழுவதும் அதனை பரப்ப முடிவு செய்திருக்கிறேன்.  பெற்றோரை அனாதை இல்லங்களில் விட்டு சென்ற பிள்ளைகளை அவர்களை பார்ப்பதற்கு கூட வருவதில்லை. அதன் விளைவாக யாரைப் பார்த்தாலும் தங்கள் மகன்   என அரவணைத்து தற்காலிக சந்தோஷம் கொள்கின்றனர் சில தாய்மார்கள்.

இப்படி தனக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தின் பாதிப்பு தான், இந்த அமைப்பை உருவாக்க காரணமாக இருக்கிறது. இனி எந்த ஒரு தாய் - தந்தையும் முதியோர் இல்லத்திற்கு சென்று விடக்கூடாது. ஏற்கனவே விடப்பட்டிருந்தால் திரும்ப வரவழைத்து கோயில் தெய்வம் போல வழங்குவோம் என தெரிவித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.  மேலும் இதுகுறித்த விழிப்புணர்வு பாடல் ஒன்றையும் அவர் அன்னையர் தினத்தன்று வெளியிட வெளியிட உள்ளார்.