தமிழ் சினிமாவை சர்வதேச தரத்துக்கு கொண்டு சென்றிருப்பவர் கமல்ஹாசன். அதனால்தான் அவரை ‘உலக நாயகன்’ என்று அழைக்கிறது கலை உலகம். அப்பேர்ப்பட்ட கமலுக்கு, அவர் பிறந்த தமிழ்நாட்டிலேயே, சக பெரும் நடிகரான ரஜினியின் மேடையில், ஒரு ஜூனியர் நடிகரால் பெரிய அவமானம் நிகழ்ந்திருக்கிறது. இதை ரஜினி தடுக்கவோ, கண்டிக்கவோ, தண்டிக்கவோ செய்யாமல் இருந்தது மிகப்பெரிய விமர்சனத்தை அவருக்கு எதிராக கிளப்பியுள்ளது. அதாவது ரஜினியின் தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த சனிக்கிழமையன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. பொதுவாக ரஜினிதான் தான் கலந்து கொள்ளும் விழா மேடைகளில் ஏதாவது சர்ச்சைக்குரிய வகையில் பேசி, பிரச்னைகளுக்கு வித்தாவார். ஆனால் இந்த முறை அவர்  தன் ரசிகர்களுக்கு அல்வா தந்துவிட்டு அமைதியாகிவிட, அவரது அடிப்பொடியாக விமர்சிக்கப்படும் ராகவா லாரன்ஸ்தான் ஓவராக பேசி பிரச்னைகளை இழுத்திருக்கிறார்.


 
சீமானை அரசியல் ரூட்டில் வம்புக்கிழுத்த ராகவா, கமல்ஹாசனை பற்றி பேசியது சினிமா துறையையே முகம் சுளிக்க வைத்துள்ளது. ரஜினியை கூல் செய்ய வேண்டும் என்பதற்காக ராகவா பேசிய வார்த்தைகள் கமலையும், அவரது அபிமானிகளையும் மிகப்பெரிய அளவில் காயம் செய்துள்ளது. அதாவது “நான் சிறுவயதில் ரஜினி நடித்த படங்கள் ரிலீஸாகும்போது போஸ்டர் ஒட்டச் செல்வேன். அப்போது அருகில் கமல் போஸ்டர் இருக்கும். அப்போது வெறுப்பில், அதன் மீது சாணி அடித்து இருக்கிறேன். ஆனால் இப்போது இருவரும் ஒன்றாக இருப்பதை பார்க்கும்போது வேறு ஏதோ நடக்கப்போகிறது.” என்று பேசினார். இதுதான் பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. 

என் தலைவன் மீது சாணியடித்தவனா நீ? எனும் ரீதியில் லாரன்ஸை ஒருமையில் வெளுத்து தள்ளியுள்ளனர் கமலின் ரசிகர்களும், அவரது கட்சியை சேர்ந்தவர்களும். 
கூடவே ரஜினிகாந்தும் இந்த விஷயத்தில் பெரும் விமர்சனத்தை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார். ராகவாவின்  அபத்தமான, அருவெறுப்பான பேச்சை ஸ்பாட்டிலேயே கண்டித்திருக்க வேண்டும் ரஜினி, அதை செய்யாமல் இருந்து கமலை அசிங்கப்படுத்திட்டார்! என்று கொதிக்கின்றனர். இது பற்றி பேசும் அவர்கள் “சமீபத்தில் கமல்ஹாசன் தனது பிறந்தநாள் விழாவை ஒட்டி மூன்று நிகழ்வுகளை நடத்தினார். அதில் இரண்டில் ரஜினியை அழைத்து கவுரவப்படுத்தினார், நட்பு பாராட்டினார். ஆனால் ரஜினிக்காக  நடந்த இந்த விழாவில் அவர் கமலை அசிங்கப்படுத்தி இருக்கிறார். ராகவா லாரன்ஸ் அப்படி பேசியதும், ரஜினி எழுந்து நின்று ‘நீங்க அன்னைக்கு அப்படி செஞ்சிருந்தால் அது பெரும் தப்பு, அதை இன்னைக்கு வெளிப்படையா சொல்லிக் காட்டுறது அதைவிட தப்பு.’ என்று கண்டித்திருக்க வேண்டும்.

ராகவாவால் கமலுக்கு நடந்தது, தமிழ் சினிமாவின் பெருமையை உலகறிய செய்த ஒரு மகா கலைஞனுக்கு, தமிழ்நாட்டில் நடந்த பெரும் அசிங்கம். கருணாநிதிக்கு பாராட்டு விழா நடந்தபோது அஜித் ‘விழாவுக்கு வரச்சொல்லி மிரட்டுறாங்கய்யா’ என்று ஓப்பன் மேடையில் பேசியபோது எழுந்து நின்று கைதட்டிய ரஜினி, உலகம் போற்றும் ஒரு கலைஞனை தன் அடிப்பொடி இப்படி அசிங்கப்படுத்துகையில் அமைதி காத்தது ஏன்? 
ஸ்பாட்டில் ராகவாவை திட்டியிருக்கலாம், கடிந்திருக்கலாம். இல்லையென்றாலும் தான் மைக்கை வாங்கி, அந்த அசெளகரியத்தை சரி செய்திருக்கலாம். ஆனால் எதையுமே செய்யாமல் விட்டதன் மூலம், கமலுக்கான அசிங்கத்தை ரசிக்கிறா ரஜினி?” என்று கேட்கின்றனர். பதில் சொல்ல வேண்டியது சூப்பர் ஸ்டார்தான்.