2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மற்ற அரசியல் கட்சிகள் எல்லாம் பம்பரமாக களத்தில் இறங்கி வேலை ஆரம்பித்துள்ள சமயத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் இன்னும் கட்சி ஆரம்பிக்காமல் இருப்பது அவருடைய ரசிகர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. 

 'ரஜினிகாந்த் நவம்பர் மாதம் கட்சி தொடங்குகிறார். அரசியல் கட்சி தொடங்குவதில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் ஒரு போதும் பின்வாங்கமாட்டார். கொரோனா இல்லாமல் இருந்திருந்தால் ரஜினி தொடங்கும் கட்சியின் முதல் மாநாடு மதுரையில் நடைபெற்றிருக்கும். அதற்கான முடிவை அவர் ஏற்கனவே எடுத்திருந்தார். அதனால், கட்சி துவங்கியதும் முதல் மாநாடு மதுரையில் நடக்க வாய்ப்புள்ளது. 

இந்நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ் தனது சோசியல் மீடியா பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு வணக்கம். இன்று நான் முக்கியமான ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அரசியலுக்குள் நுழையாமல் சமூக சேவை செய்வேன் என்று கடந்த மாதம் எனது சமூகவலைதள பதிவில் தெரிவித்திருந்தேன். அதன் பின்னணியில் இருக்கும் காரணத்தை இங்கே கூறுகிறேன்.

நான் ஏராளமான சமூக சேவை பணிகளை செய்து வருவதால் எனது நண்பர்கள், அரசியல்வாதிகள், செய்தியாளர்கள் ஆகியோர் நான் அரசியலுக்கு வரவேண்டும் என்பதால் தான் இவற்றை செய்கிறேனா என்று கேட்கின்றனர். சிலர் அரசியலில் நான் இணைந்தால் இன்னும் அதிகமாக சேவை செய்ய முடியும் என்று அறிவுரை கூறினார்கள்.

முக்கியமாக கொரோனா பிரச்னைக்கு பின்னர் அழுத்தம் அதிகரித்திருக்கிறது. அனைவருக்கும் நான் ஒரு பொதுவான நபர் என்று சொல்ல விரும்புகிறேன். ஆதரவற்ற குழந்தைகளுக்காக எனது வீட்டில் ஒரு ஹோம் நடத்தி வருகிறேன். எனக்கு உதவி தேவைப்படும்போதெல்லாம் நான் அரசிடம் உதவி கோருகிறேன். கலைஞர், ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் பலரது இதய அறுவை சிகிச்சைகளுக்காக உதவி செய்துள்ளனர்.

அதேபோல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்டோரும் நான் சேவை செய்ய பல்வேறு வகைகளில் உதவி வருகிறார்கள். அரசியலில் நுழைந்தால் தனி மனிதனாக உதவி செய்வதை விட அதிகம் செய்ய முடியும் என்பதை நான் அறிவேன்.

எதிர்மறை அரசியல் செய்வது எனக்கு பிடிக்காது. அரசியலில் இருந்தால் எதிர்மறையாக ஒருவரை பேச வேண்டியிருக்கும். ஏனென்றால் நான் அனைவரையும் மதிக்கிறேன். யாராவது ஒருகட்சி தொடங்கி அதில் எதிர்மறை அரசியல் செய்ய வேண்டாம், யாரைப்பற்றியும் தவறாக பேசி புண்படுத்த வேண்டாம் என்ற நிலை இருந்தால் அப்போது நான் அவர்களுடன் சேர்ந்து பொது சேவையில் ஈடுபடுவேன். இந்தியாவில் அப்படி ஒரு நேர்மறை அணுகுமுறையுடைய கட்சியை ஆரம்பிக்க எனது குரு ரஜினிகாந்தால் மட்டுமே முடியும் என்று நம்புகிறேன்.

அரசியல் காரணங்களுக்காக அவர் இதுவரை யாரையும் காயப்படுத்தியதில்லை. அவர் கட்சி ஆரம்பித்தால் யாரையும் காயப்படுத்தமாட்டார் என்று நம்புகிறேன். ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் தொடங்கினால் அவரது லட்சக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருவனாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவை செய்ய காத்துக் கொண்டிருக்கிறேன். சேவையே கடவுள்.” என்று தனது அறிக்கையில் தெரிவித்திருக்கும் ராகவா லாரன்ஸ் நவம்பர் மாதத்தைக் குறிப்பிட்டு கேள்விக்குறியுடன் முடித்துள்ளார். இதன் மூலம் ரஜினிகாந்த் நவம்பர் மாதத்தில் புதிய கட்சியை தொடங்க இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது