நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கொரோனாவால் வேலை இல்லாமல் பாதிக்கப்பட்ட பலருக்கு தொடர்ந்து பல்வேறு நிதி உதவிகளை அறிவித்து, வருகிறார். அந்த வகையில், ஆரம்பத்திலேயே டான்ஸ் யூனியனை சேர்ந்தவர்களுக்கு ரூபாய் 50 லட்சம் நிதி உதவியை அறிவித்தார்.

இந்த பணத்தை பிரிந்து கொடுக்கும் பொறுப்பு, டான்ஸ் யூனியன் சங்கத்தின் தலைவர், தினேஷிடம் ஒப்படைக்கப்படுள்ளது. 

டான்ஸ் யூனியன் சங்கத்தை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் ரூபாய் 5500 , வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தற்போது நிலவி வரும் சூழலில், நடன கலைஞர்கள் அனைவரும், அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதன் காரணமாக பலரால் நேரில் வந்து உரிய தொகையை பெற்றுக்கொள்ள முடியவில்லை.

இதனால், பலர் தொடர்ந்து ராகவா லாரன்சுக்கு போன் செய்து எப்படி இந்த தொகையை பெற்று கொள்வது என தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதால், அவர்களுக்கு விளக்கம் கொடுக்கும் விதமாக ஒரு அறிவிப்பை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதில், யாரும் பணத்தை பெற நேரில் வர வேண்டாம். அனைவருடைய வங்கி கணக்குகளுக்கும், நடன இயக்குனர் தினேஷ் டெபாசிட் செய்து வருவதாக தெரிவித்து அவருக்கு தன்னுடைய நன்றிகளையும் தெரிவித்துள்ளார் லாரன்ஸ். 

படப்பிடிப்புகள் அனைத்தும் நடைபெறாமல் உள்ள நிலையில் இந்த தொகை, டான்ஸ் யூனியனை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் மிகவும் உதவிகரமாக இருக்கும். சினிமா துறையில் மே 11 ஆம் தேதி முதல் சில பணிகளை தொடர தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், இது டான்ஸ் துறையை சம்பந்தப்பட்டவர்களுக்கு சாத்தியம் இல்லாததால், எப்போது படப்பிடிப்பு துவங்குமோ அப்போது தான் டான்ஸ் தொழிலாளர்கள் அனைவர்க்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.