கொரோனா வைரஸின் திடீர் பாதிப்பால் பலர் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். கூலி வேலை செய்பவர்கள் முதல், தொழிலதிபர்கள் வரை ஏதோ ஒரு விதத்தில் சரிவை சந்தித்துள்ளனர்.

ஏப்ரல் மாதத்தோடு அனைத்தும் முடிவிற்கு வந்துவிடும் என நினைத்த பலருக்கும், மே 3 ஆம் தேதி வரை, ஊரடங்கு நீடித்தது ஏமாற்றம் தான் என்றாலும், தற்போது தமிழகத்தில் நிலவி வரும் சூழலுக்கு இந்த ஊரடங்கு தேவை என்பதும் பலருடைய கருத்தாகவும் உள்ளது.

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சினிமா கலைஞர்களுக்கு, பலர் உதவி வரும் நிலையில்... நடிகர் ராகவா லாரன்ஸ் எடுத்ததுமே 3 கோடி நிதி உதவியை அளித்தார். இதை தொடர்ந்து பல உதவிகளை செய்ய உள்ளதாக தெரிவித்து வந்த இவர், பசியோடு இருப்பவர்கள் பசியாற தேவையான முயற்சியை எடுத்து வருவதாக தமிழ் புத்தாண்டு அன்று தெரிவித்தார்.

மேலும், ஓவ்வொரு தூய்மை பணியாளர்களுடைய வங்கி கணக்கிலும் பணம் போட உள்ளதாகவும், அதுகுறித்த முயற்சிகளை எடுத்து வருவதையும் தெரியப்படுத்தினார். இதை தொடந்து, சென்னை - செங்கல்பட்டு விநோயோகஸ்தர் சங்கத்திற்கு ரூபாய்.15 லட்சம் நிதி உதவி வழங்கினார். இதற்கு நேற்றைய தினம், இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தர் தன்னுடைய நன்றிகளை தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது, நலிந்த நடிகர்கள் கஷ்டப்படுவதை அறிந்து அவர்களுக்கு, ரூபாய் 25 லட்சம் நிதி உதவியை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் கஷ்டப்பட்டு வரும் அனைவருக்கும், வசதிபடைத்தவர்கள் முன்வந்து உதவி செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மென்மேலும் உதவிகளை செய்து, ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ராகவா லாரன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.