நீண்ட நெடிய மூன்று வருட  ஓய்வுக்குப் பின் ‘ஒத்த செருப்பு’ என்ற விநோதமான தலைப்பில் படம் இயக்கி நடிக்கவிருக்கிறார் ரா.பார்த்திபன். இதன் 36 வினாடி முதல் பார்வை வீடியோவை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டிருக்கிறார்.

எப்போதுமே வித்தியாசமான கதைக்களங்களை இயக்குபவர் பார்த்திபன். ஆனாலும்  பல வருடங்களாக வெற்றி அவருக்கு கைவசப்படவில்லை. 2014 ல் வெளிவந்த ‘கதை திரைக்கதை இயக்கம்’ பார்த்திபனினை ஓரளவு காப்பாற்றியது. அடுத்து   2016-ம் ஆண்டு 'கோடிட்ட இடங்களை நிரப்புக' என்ற படத்தை இயக்கினார். இதில் பார்த்திபன், சாந்தனு, பார்வதி நாயர் உள்ளிட்டோர் நடித்தனர். இப்படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை.

அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்துவந்த பார்த்திபன், தற்போது மீண்டும் படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். 'ஒத்த செருப்பு' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தைத் தயாரித்து, இயக்கி, நடிக்கவும் உள்ளார். சந்தோஷ் நாராயண் இசையமைக்கவுள்ள இப்படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.

இதன் ஃபர்ஸ்ட் லுக் வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் விஜய் சேதுபதி.  இந்த வீடியோ பதிவின் மூலம் இக்கதை த்ரில்லர் வகையைச் சார்ந்ததாக இருக்கும் எனத் தெரிகிறது. வீடியோவை வெளியிட்ட விஜய்சேதுபதிக்கு நன்றி தெரிவித்த பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் ..."ஆத்தா நான் உண்டாயிட்டேன்"...பிரசவ பரவசம் இப்பவே!...துவக்கி வைத்த நண்பர்...திரு விஜய் சேதுபதிக்கு நன்றி!’என்று பதிவிட்டுள்ளார்.

தற்போதைக்கு விஷாலின் 'அயோக்யா' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் பார்த்திபன். அப்படத்தின் பணிகளை முடித்துவிட்டு, முழுமையாக 'ஒத்த செருப்பு' பணிகளைக் கவனிப்பார் எனத் தெரிகிறது.