மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஒரு பக்கம் போட்டி போட்டு வரும் நிலையில், ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் வெப்சீரிஸ் மற்றும் திரைப்படங்களை வெளியிடக் கூடாது என மற்றொரு பக்கம் பிரச்சனைகளுக்கு மேல் பிரச்சனை எழுந்து வருகிறது. 

இந்த நிலையில் 'தலைவி' மற்றும் 'குயின்' ஆகிய படங்களுக்கு தடை கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவரின் மனுவை விசாரித்த நீதிமன்றம், 'குயின்' தொடரில் தீபாவின் கதாபாத்திரம் இடம்பெறவில்லை என கௌதம் வாசுதேவ் மேனன் தரப்பு உத்திரவாதம் அளித்ததை அடுத்து, இந்த தொடரை வெளியிட தடையேதும் இல்லை என தீர்ப்பு வழங்கியது.

அதேபோல் 'தலைவி' படத்தின் கதையையும் முழுக்க முழுக்க கற்பனை என அறிவிக்க வேண்டும் என பட நிர்வாகத்திற்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த பிரச்சினை நடந்து முடிந்த நிலையில் தற்போது நாளை வெளியாக உள்ள 'குயின்' தொடருக்கு, புதிய பிரச்சனை எழுந்துள்ளது.

ஜோசப் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள புதிய மனுவில், உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள, 'குயின்' சீரிஸுக்கு தடை விதிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.  

இதுகுறித்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது. புதிய வழக்கு தற்போது தொடரப்பட்டுள்ளதால், நாளை வெளியாகவுள்ள இந்த தொடர் வெளியாகுமா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.