37 வயதான பஞ்சாபி பாடகர் ஹர்மன் சித்து கார் விபத்தில் உயிரிழந்தார். நவம்பர் 21 இரவு கியாலா கிராமத்திற்குச் சென்றபோது, அவரது கார் லாரி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
Singer Harman Sidhu Passes Away : பிரபல பஞ்சாபி பாடகர் ஹர்மன் சித்து கார் விபத்தில் உயிரிழந்தார். ஹர்மனுக்கு 37 வயதுதான் ஆகிறது. அவர் தனது வரவிருக்கும் பாடலின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, நவம்பர் 21 அன்று இரவு 12 மணியளவில் தனது சொந்த ஊரான கியாலாவுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கார் லாரி மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் மான்சா காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அவர்கள் அங்கு விரைந்தனர். பின்னர், அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தச் செய்தியைக் கேட்டு ஒட்டுமொத்த திரையுலகமும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

ஹர்மனின் இறுதிச் சடங்கு எப்போது?
ஹர்மன் சித்துவின் இறுதிச் சடங்கு நவம்பர் 22 ஆம் தேதி அவரது சொந்த ஊரான கியாலாவில் நடைபெறும். அவருக்கு தாய், மனைவி பூஜா மற்றும் ஒரு மகள் உள்ளனர். சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு அவரது தந்தை இறந்தார். மிஸ் பூஜா, 'காகஸ் ஜான் பியார்', 'மேளா', 'மொபைல்', 'பாகன் வாலா' போன்ற பாடல்களை ஹர்மன் சித்து பாடியுள்ளார்
பாடகர் ஹர்மன் சித்து, ஒரு தசாப்தத்திற்கு முன்பு மிஸ் பூஜாவுடன் டூயட் பாடல்கள் பாடி தனது புகழின் உச்சத்தில் இருந்தார். இவரது 'பேப்பர் தே பியார்' ஆல்பம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, ஒரே இரவில் அவரை நட்சத்திரமாக்கியது. டூயட் பாடும் காலம் முடிந்த பிறகு, 2025-ல் ஹர்மன் மீண்டும் கம்பேக் கொடுக்க இருந்தார். 2025 இறுதிக்குள் அவரது இரண்டு பாடல்கள் வெளியாகவிருந்தன. அதற்குள் அவர் சாலை விபத்தில் மரணமடைந்து இருப்பது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.


