‘சர்கார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டபோது இடம் பெற்றிருந்த அவர் தம் அடிக்கும் காட்சிகள் பெரும் சலசலப்பை உண்டு பண்ணின. டாக்டர் அன்புமணி ராம்தாஸ் தொடங்கி சாதாரண ஜனங்கள் வரை எதிர்ப்பு வலுக்கவே அந்த போஸ்ட்ரகள் வாபஸ் பெறப்பட்டு, வேறு படங்கள் வெளியிடப்பட்டன. 

தற்போது படம் வெளியாக இன்னும் நான்கு தினங்களே உள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் அடிக்கும் போஸ்டர்களில் பெரும்பாலானவை அவர் தம் அடிக்கும் காட்சிகளாகவே உள்ளன. அதை கண்டித்து விஜயோ இயக்குநர் முருகதாஸோ அறிக்கை வெளியிடாத நிலையில் சும்மா எதிர்ப்புக்காக ஆரம்பத்தில் விஜய் தம் அடிக்கும் ஸ்டில்களை தவிர்த்துவிட்டு படத்தில் அக்காட்சிகள் இடம் பெற்றிருக்குமோ என்ற சந்தேகம் எழ ஆரம்பித்துள்ளது.

ஒருவேளை படத்தில் விஜய் புகை பிடிக்கும் காட்சிகள் இருந்தால் அதை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம் என்று புகையிலை கட்டுப்பாட்டுக்கான தமிழ்நாடு மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ’சென்னை உயர்நீதிமன்றத்தில் நாங்கள் ஏற்கனவே ‘சர்கார்’ படத்தின் மீது தொடுத்துள்ள வழக்கையும் மீறி தமிழ்நாடு முழுக்க விஜய் ரசிகர்கள் அவர் புகை பிடிக்கும் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இதனை தயாரிப்பாளர்களும் விஜய்யும் உடனே தடுக்கவேண்டும். இல்லாவிட்டால் படத்துக்கு தடை கோரி மீண்டும் கோர்ட்டை அணுகுவோம்’ என்று கடுமையாக எச்சரித்துள்ளனர்.