நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் தருவதாலும் தொடர்ந்து கலாச்சாரச் சீரழிவுக்கு வழி வகுத்து வருவதாலும்  பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யவேண்டும் என்று  கோரி தமிழ்நாடு தெலுங்கு யுவ சக்தி அமைப்பினர் டெல்லியில் போராட்டம் நடத்தியுள்ளனர்.

 தமிழ்நாடு தெலுங்கு யுவ சக்தி அமைப்பின் தலைவர் கேதிரெட்டி ஜகதீஸ்வரா ரெட்டி தலைமையில் டெல்லி, ஜந்தர் மந்தரில் நடந்த இந்த போராட்டத்தில், பத்திரிக்கையாளர் சுவேதா ரெட்டி மற்றும் நடிகை காயத்ரி குப்தா ஆகியோருக்கு ஆதரவு தெரிவித்து கிட்டத்தட்ட 100க்கும் அதிகமான சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டுள்ளனர். அப்போது பேசிய தமிழ்நாடு தெலுங்கு யுவ சக்தி அமைப்பின் தலைவர் கூறுகையில், ’தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக கண்டிப்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தேர்வு என்ற பெயரில் அவர்களை படுக்கைக்கு அழைப்பதும், தவறாக பேசுவதுமாக இந்த நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது. இது இன்றைய தலைமுறை இளைஞர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

இந்நிகழ்ச்சி குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அனைத்து மகளிர் சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண் அரசியல் பிரமுகர்கள் முன்வரவேண்டும் என்றும், அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், மத்திய அரசு உடனடியாக இது தொடர்பாக விசாரணையை மேற்கொள்ள வேண்டும். இந்நிகழ்ச்சி ஆபாசத்தை ஊக்குவித்தல், அநாகரீக, வன்முறை, சட்டவிரோதமாக ஊக்குவித்தல், தார்மீக எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலமாக குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் ஆகியோர்களை தவறான பாதைக்கு எடுத்துச் செல்லும் விதமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 

இந்நிகழ்ச்சியை குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்கள் குடும்பத்தோடு அமர்ந்து கண்டு களிப்பதால், உடனடியாக நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும். இன்று மட்டுமல்ல ஆண்டு தோறும் ஒளிபரப்பப்பட்டு வரும் இந்நிகழ்ச்சி அமைதி மற்றும் கலாச்சார சீரழிவை உருவாக்குகிறது. இதன் காரணமாக இந்நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்றார். 

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக தொலைக்காட்சி நிருபர் ஸ்வேதா ரெட்டி, நடிகை காயத்ரி குப்தா ஆகியோர் சமீபத்தில் தங்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்ததாக புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.