துல்கர் மன்னிப்பு அவசியமில்லை..! அவர் தான் கேட்க வேண்டும்! பிரபாகரன் பெயர் சர்ச்சை: அதிரடி காட்டும் பிரபலம்!
சமீபத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் தமிழில் வெளியான 'கண்ணும் கண்ணும்' கொள்ளையடித்தல் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், துல்கர் சல்மான் தயாரித்து நடித்த “வரனே அவஷ்யமுண்டு” திரைப்படம் கடந்த 9ம் தேதி ரிலீஸ் ஆகியது.
சமீபத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் தமிழில் வெளியான 'கண்ணும் கண்ணும்' கொள்ளையடித்தல் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், துல்கர் சல்மான் தயாரித்து நடித்த “வரனே அவஷ்யமுண்டு” திரைப்படம் கடந்த 9ம் தேதி ரிலீஸ் ஆகியது. இந்த படத்தில் மும்பையைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவரின் புகைப்படத்தை பயன்படுத்திய விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. அதற்காக துல்கர் சல்மான் மன்னிப்பு கோரினார்.
மேலும் இந்த படத்தில் தமிழர்களால் வீர தலைவராக பார்க்கப்படும், பிரபாகரன் பெயரை அவமதித்ததாக கூறி பிரச்சனை கிளம்பியுள்ளது. அதாவது இந்த படத்தில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என பெயர் வைத்திருந்தனர்.
காமெடி காட்சி ஒன்றில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பெயரை அவமதித்திருப்பதாக கூறி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அந்த படத்தில் பிரபாகரன் பெயரை பயன்படுத்தியதற்கான காரணத்தை கூறியுள்ள துல்கர் சல்மான், தமிழக மக்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்திற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன்னுடைய கண்டனங்களை எழுப்பி முகநூல் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு பலரும் தங்களுடைய ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
இதுகுறித்து அவர் கூறுகையில்... இல்லாத பெருவலியில் இருப்பவர்கள் நாங்கள். எங்களை வழிநடத்திய தமிழ்த் தலைவரை கண் காணாது தவித்திருக்கிறோம்.
தமிழர்கள் எங்களின் பாதுகாப்பு அரணை... மரியாதையை... காவலனை எங்கே தேடிக் கண்டடைவோம் என கவலை கொண்டிருக்கிறோம்.
தமிழர்கள் ஒவ்வொருவரும் எங்கள் அண்ணன் என இதயத்துக்குள் இறுக்கி வைத்திருப்பவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்.
பிரபாகரன் என்பது வெறும் பெயரல்ல. அது உலகத் தமிழர்களை இணைக்கும் மந்திரச் சொல்.
பிரபாகரன் என்பது வெறும் பெயரல்ல. அது எம் ஒட்டுமொத்தத் தமிழர்களின் உயிருக்கு நிகர்.
அந்தப் பெயரைச் சொல்லும்போதே எங்கள் உணர்வுகளில் மின்சாரம் பாயும்.
அதெல்லாவற்றையும் இளக்காரமாக்கும் தொனியில் "வருணே அவஷியமுண்டு" என்ற மலையாளப் படத்தில் கேவலமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
பாண்டி என்றழைத்துக் கேவலப்படுத்துவதும்... திருடர்கள் என்று காட்சிப்படுத்துவதும் மலையாள திரையுலகினரின் கீழ்த்தரமான படமாக்கல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகிறது.
அனைத்து மலையாளப் படங்களும் தமிழ்நாட்டிலும் வெளியாகத்தான் செய்கிறது. அங்குள்ள நடிகர்கள் நடிகைகள் இங்கும் நேரடிப் படங்களில் நடித்துக் கொண்டும்தான் இருக்கிறார்கள்.
மலையாள திரையுலகைச் சேர்ந்த நயன்தாரா இங்கு நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற மரியாதை கொடுத்துத்தான் வைத்திருக்கிறோம்.
இதே துல்கர் நடித்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படம் இங்கு வெளியாகி நன்றாக ஓடியது.
எங்களின் மரியாதையும் தரும் புகழ் வெளிச்சமும் இப்படியிருக்க, எப்படி உங்களால் எங்கள் தமிழ்த் தலைவனை குரூர புத்தியில் சிந்திக்க முடிகிறது?
எங்கள் உணர்வுகளைக் காயப்படுத்த முடிகிறது?
1988ல் பட்டண பிரவேஷம் என்ற படத்தில் காமெடியாக பிரபாகரன் பெயரை அலட்சியமாகப் பயன்படுத்தியுள்ளனர்.
அந்த படத்தின் இயக்குநர் இந்த "வருணே அவஷியமுண்டு" இயக்குநர் அணூப்பின் தந்தை. வளர்ப்பு அப்படி. அதுதான் அந்தக் கேடுகெட்ட மகன் அப்படியொரு காட்சியை மீண்டும் பயன்படுத்தியிருக்கிறார்.
அந்தக் குடும்பம் தொடர்ந்து நம் தலைவரை அண்ணனை அவமானப்படுத்தும் போக்கை கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாகக் கடத்திக் கொண்டு வருகின்றனர்.
நாங்கள் எங்கள் படத்தில் கேரளாவில் நீங்கள் மதிக்கும் தலைவர்களின் பெயரை பன்றிக்கு வைத்தால் பொறுத்துக் கொள்வீர்களா?
கேரள முதல்வர் பிணராயி விஜயனை கொண்டாடி வருகிறோமே... உங்களுக்குள் மட்டும் ஏன் இந்த மட்டம்தட்டும் கீழ்த்தரமான எண்ணம் கடந்துகொண்டே வருகிறது??
உணர்வுள்ள தமிழர்களாய் நாங்கள் செயல்படும் நேரம் தொடங்கிவிட்டது. இனியும் பொறுத்துக் கொள்ளும் அளவு அமைதியாக இருக்கப் போவதில்லை.
நாங்கள் எங்கள் அண்ணனைக் காணாத தம்பிகளாகத் தவித்திருக்கும் காயத்தில் வேல் பாய்ச்சி ஆனந்தப் பட்டால் விடமாட்டோம்... தவறுகளை உணரச் செய்வோம்.
அந்தப் படத்திலுள்ள சம்பந்தப்பட்ட காட்சிகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.
ஆன்லைன் வெளியீட்டிற்கு கொடுக்கப்பட்டிருக்கும் பிரதியிலும் கூட. இதை தயாரிப்பாளர் துல்கர் சல்மான் உடனடியாக செய்ய வேண்டும்.
அதேசமயம் துல்கர் மன்னிப்பு கேட்க வேண்டிய தேவையில்லை. அந்தக் காட்சியினை உருவாக்கிய காலம் காலமாக புரையோடிக் கொண்டிருக்கும் தன் தந்தையிடமிருந்து கடத்தப்பட்டிருக்கும்...
எண்ணங்களை தமிழர் உணர்வுகளின்மீது கொண்டிருக்கும் இயக்குநர் அணூப் மன்னிப்பு கேட்க வேண்டும்.
அதோடு, இனிவரும் மலையாளப் படங்கள் உன்னிப்பாகக் கவனிக்கப் படும். தமிழர்கள்.. தமிழர் தம் தலைவர்கள்.. உணர்வுகள் தரம் தாழ்த்தி காட்சிப்படுத்தப் பட்டிருந்தால் அந்தப் படம் அது சார்ந்த கலைஞர்கள் தமிழகத்தில் புறக்கணிக்கப்படும் என்பதை கவனத்தில் வையுங்கள் என சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.