‘விஸ்வாஸம்’ படப்பிடிப்பு முடிய இன்னும் பத்து நாட்களே பாக்கி உள்ளதாலும்,அதன் பொங்கல் ரிலீஸ் நூறு சதவிகிதம் உறுதியாகியிருப்பதால் தல பற்றிய செய்திகளுக்கு கொஞ்ச நாளைக்கு பஞ்சம் இருக்காது.

இச்செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜனே படம் குறித்த சில தகவல்களை ‘பில்லா பாண்டி’ பட ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டார்.

அஜீத்தின் தீவிர ரசிகராக ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் ‘பில்லா பாண்டி’ பட ஆடியோ நிகழ்ச்சிக்கு அஜித்துக்கு அழைப்பு இருந்தும் வழக்கம் போல் அவர் கலந்துகொள்ளவில்லை. ஆனால் இந்த நிராகரிப்பு படத்துக்கு எதிரானதாக மாறி ரசிகர்கள் புறக்கணித்துவிடக்கூடாதே என்பதற்கு தனது சார்பில் கலந்துகொள்ளும்படி தயாரிப்பாளர் தியாகராஜனை அனுப்பியிருந்தார் அஜீத்.

இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய தியாகராஜன், ‘விஸ்வாஸம்’ படம் 90 சதவிகிதம் முடிந்துவிட்டது. இப்படம் பொங்கலுக்கு ரிலீஸாவதில் எந்த மாற்றமும் இல்லை. அஜீத் ரசிகர்கள் ஆச்சர்யப்படும்படி சில சமாச்சாரங்கள் இருக்கின்றன. அதை இங்கே சொல்லமுடியாது. ஆனால் இதுவரை டான்ஸ் விவகாரத்தில் அஜீத்தை கிண்டல் செய்தவர்கள் வெட்கித்தலைகுனியும்படி இரண்டு பாடல்களுக்கு மிகப் பிரமாதமாக ஆடியிருக்கிறார்’ என்றார் தியாகராஜன்.

 வேற வழி? பொங்கல் வரைக்கும் விஸ்வாஸமா நாங்க இதை நம்பித்தானே ஆகணும் தியாகராஜன் சார்??