இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்து வரும் கொரோனா தொற்றுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை மோசமான நிலைக்கு சென்று, தற்போது நல்ல நிலைக்கு திரும்பியுள்ளார். கடந்த ஒருமாதமாகவே சிகிச்சை பெற்று அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், பிசியோதெரபி சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னனி தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் நிறுவன தயாரிப்பாளர் ஐசரி கணேஷனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் இவர் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான தேவி, போகன், எல்கேஜி, கோமாளி உள்ளிட்ட படங்கள் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர்- கமல் ஹாசன் இணைந்துள்ள இந்தியன் 2 படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நயன்தாரா முதன் முறையாக அம்மனாக நடித்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை இவர் தான் தயாரித்துள்ளார். அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஐசரி கணேஷனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அந்த தகவல் முற்றிலும் வதந்தி என்றும், அவர் பூரண உடல் நலத்துடன் இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.