கடந்த சில வருடங்களாகவே, நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் மாறி, மாறி, பல பிரச்சனைகள் தலை தூக்கிய வண்ணம் உள்ளது. இரு தரப்பினராக பிரிந்து போராட்டத்தில் கூட ஈடுபட்டனர் என்பது அனைவரும் அறிந்தது தான். இதனால் முறையாக தேர்தல் நடத்தும் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டன. 

இந்நிலையில், கொரோனா பிரச்சனையால் திரையுலகத்தில், போஸ்ட் புரோடுக்ஷன் பணிகளில் சில வற்றிற்கு மட்டுமே தளர்வு கொண்டு வந்துள்ள நிலையில், மற்ற பணிகள் இன்னும் துவங்காமல் உள்ளது. எனவே கிடைத்திருக்கும் இந்த தருணத்தில் தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்று கூடி பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என முடிவு செய்துள்ளனர்.

அதன்படி தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில். அன்புள்ள தயாரிப்பாளர் நண்பர்களே தற்சமயம்
"கோரானா வைரஸ்" தாக்கத்தால் ஊரடங்கு பாதிப்பினால் நமது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மனரீதியாகவும், தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்என்பது அனைவரும் அறிந்ததே.

நமது சங்கத்திற்கு தேர்தல் தள்ளிப்போகக்கூடிய சூழ்நிலை உள்ளதால் இந்த நேரத்தை வீணாக்காமல் நல்ல விஷயங்களை பேசி தீர்வு காண்பதற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தேர்தல் நேரத்தில் பல அணிகளாக பிரிந்தாலும் திரைத்துறையை சீர்தூக்கி நிலைநிறுத்தும் விஷயத்தில் நாம் அனைவரும் ஒரு அணியாக ஒருங்கிணைந்து செயல்பட்டு தீர்வு கண்டு அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ வேண்டும். 

நமக்கு உண்டான பிரச்சனையை நாமே ஒருங்கிணைந்து தீர்த்துக்கொள்ள போவதால் இதற்கு நீதிமன்றமோ, நீதிபதியோ, பதிவாளரோ மறுப்பு சொல்லப்போவதில்லை.

நமது சக உறுப்பினர்கள் திரைத்துறை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அரசாங்கத்திடமும் மற்றும் திரைப்பட நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், பைனான்சியர்கள் கலந்து பேசி நமது திரைத்துறைக்கு ஏற்பட்டிருக்கும் பேரிழப்பை சரிசெய்து தமிழ் திரைத்துறையும் தயாரிப்பாளர்களும் மன நிம்மதியாக சிறப்பாக செயல்பட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர்களாகிய பாரதிராஜா,எஸ் ஏ சந்திரசேகர், எஸ் தாணு, கேயார்,டிஜி தியாகராஜன், முரளிதரன் இவர்களுடன் மேலும் அனுபவம் வாய்ந்த 36 தயாரிப்பாளர்கள் அடங்கிய மொத்தம் 42 பேர் கொண்ட இந்த குழு திரைத்துறையில் அனைத்து துறைகளுடனும் கலந்து பேசி நல்லதொரு விடியலை தயாரிப்பாளர்களுக்கு ஏற்படுத்தி தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒருங்கிணைத்து கீழ்கண்ட குழுவுக்கு ஆதரவும், ஆலோசனைகளையும் நல்கி திரைத்துறை சீறும் சிறப்புமாக விளங்கிட நம் ஒத்துழைப்பினை நல்கிடுவோம்.

டி. சிவா, ௮ன்பு செழியன், ஐசரி கணேஷ், கமீலா நாசர் உள்ளிட்ட 36 பேர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.