தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் சீல்லை, அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலுக்கும், அவருடைய எதிர் தரப்பினருக்குமான மோதலில் நேற்று முன் தினம், சென்னை தி நகரில் அமைந்துள்ள தயாரிப்பாளர் சங்க கட்டிடத்திற்கு பூட்டு போட்டு தங்களுடைய கண்டனத்தை தெரிவித்தனர் தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த ஒரு தரப்பினர்.

மேலும்  நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை ஏற்ற பிறகு, கடந்த 8 ஆண்டுகளாக சேமித்து வைக்கப்பட்டிருந்த  ஏழு கோடி ரூபாய்  வைப்பு நிதி கையாடல் செய்திருப்பதாகவும், விஷால் தரப்பினர், சங்கப் பொதுக் குழுவின் ஒப்புதல் பெறாமல் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் புகார்களை அடுக்கினர். 

இதைதொடர்ந்து நேற்று விஷால் மற்றும் அவருடைய தரப்பைச் சேர்ந்தவர்கள் பூட்டை உடைக்க முற்பட்டனர்.  அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார்... வாக்கு வாதம் அதிகரிக்கவே ஒரு கட்டத்தில் விஷால் மற்றும் அவருடைய ஆதரவாளர்களை கைது செய்தனர்.

பின் விஷால் மற்றும் அவருடைய தரப்பை சேர்ந்தவர்கள், 8 மணி நேரத்திற்கு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து பதிவுத்துறை அதிகாரிகள், தயாரிப்பாளர் சங்கத்திற்கு சீல் வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அச்சங்கத்தின் தலைவர் விஷால் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தி நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீல்லை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும் தயாரிப்பாளர் சங்கத்தால் தேர்ந்தெடுத்த நிர்வாகிகளை பணி செய்யவிடாமல்  தடுத்தது தவறு என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சங்க நிர்வாகிகளை காவல்துறையினர் கையாளும் விதம் தவறானது என்ற உயர்நீதிமன்றம்,  விஷால் மீது தவறு இருந்தால்   புகார் கொடுக்காமல் பூட்டு போடுவதா? என சரமாரி கேள்விகளை நீதிபதி  எழுப்பி இறுதியில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீல்லை அகற்ற உத்தரவிட்டார்.