நடிகை கீர்த்தி சுரேஷ், சாவித்திரியின் வாழ்க்கை படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். இந்த படத்தை தொடர்ந்து திரைப்படங்களின் கதைகளை மிகவும் கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அதே நேரத்தில், கீர்த்தி சுரேஷுக்கு பாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் தேடி வந்தது. பல நடிகைகளுக்கும், மிக பெரிய கனவாக இருக்கும் பாலிவுட் வாய்ப்பு இவருக்கு குறுகிய காலத்தில் கிடைத்தது இவருக்கு அடித்த அதிர்ஷ்டமாகவே பார்க்கப்பட்டது.

அஜய் தேவ்கான் நடிப்பில், 'Maidaan ' என்கிற பெயரில் உருவாகும் இந்த படத்தில், அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் கீர்த்தி. இப்படத்திற்காக தன்னுடைய உடல் எடையை கணிசமாக குறைத்து, நியூ லுக்கிற்கு மாறினார்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் திடீர் என விலகியுள்ளார். கீர்த்தி கால்ஷீட் கொடுத்த நாட்களில் இவரின் படப்பிடிப்பை நடத்தாமல், படக்குழு தாமதித்தது தான் இப்படத்தில் இருந்து விலக காரணம் என கூறப்படுகிறது. மேலும் அஜய் தேவ்கனை விட கீர்த்தி மிகவும் இளமையாக தெரிவதால், இந்த படத்தில் இருந்து கீர்த்தி விலகிவிட்டதாகவும் ஒரு தகவல் கூறப்படுகிறது.

தற்போது இந்த படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் விலகிய வேகத்தில், பருத்தி வீரன் பட நடிகை 'பிரியாமணி' அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.