சுமார் மூன்று வருடங்களுக்கு படப்பிடிப்பு துவங்கப்பட்ட, ஏழெட்டு முறை ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்ட பரத்தின் ‘பொட்டு’ படம் ஒருவழியாக வரும் 8ம் தேதி ரிலீஸ் செய்யப்படவிருக்கிறது. ஹிட்டு என்ற வார்த்தையை நடிகர் பரத் கேட்டு எட்டு வருடங்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில் இப்படமாவது அவரைக் காப்பாற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.வடிவுடையான் இயக்கத்தில் பரத் நாயகனாக நடித்துள்ள படம் ‘பொட்டு’. இந்தப் படத்தை ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான் மேக்ஸ், ஜோன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகிய மூவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும், தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ் ராம், ஷாயாஜி ஷிண்டே, மன்சூர் அலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவா லட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். 

பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, படம் தள்ளிப்போன நிலையில், இப்போது இப்போது இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பின்னணியில் ஹாரர் கதையில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகிற 8 ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்துப் பேசிய இயக்குனர் வடிவுடையான்.'’பரத் நடித்த படங்களிலேயே இந்த படம் தான் முதன் முறையாக 1000 தியேட்டர்களில் ரிலீஸ்    ஆகிறது. அதுவும் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிறது. கேரளா, கர்நாடகா போன்ற இடங்களில் நேரடியாக தமிழ் ரிலீஸ் செய்கிறோம்.

மருத்துவக் கல்லூரி பின்னணியில் உருவாகியுள்ள படு பயங்கரமான ஹாரர் படம் இது. இந்த  படத்தில் பரத் பெண் வேடத்தில் நடித்துள்ளார், அதற்காக அவர் தனது உடல் மொழிகளை மாற்றிக் அந்த கதாபாத்திரமாக மாறி சிறப்பாக நடித்துள்ளார். படம் குழந்தைகள் முதல் அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம் என்றார்.