மலையாளத்தில் 25 படங்களுக்கும் மேல் இயக்கியுள்ள பிரபல  இயக்குனர் பாபு நாராயணன் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 59.

கேன்சர் நோய் காரணமாக சில வருடங்களாக  கேரள, திருச்சூர் தனியார் மருத்துவமனையில் பாபு நாராயணன் சிகிச்சை பெற்று வந்ததாகவும் இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்ததாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மலையாள சினிமாவில் 90 களில் பிரபலமான இயக்குனராக இருந்தவர் பாபு நாராயணன். இவரும் இவரது நண்பர் அனில்குமாரும் இரட்டையர்களாகவே படங்கள் இயக்கி வந்தனர். பொன்னாரம் தோட்டத்தே’, ’ராஜாவுவெல்கம் கொடைக்கானல்குடும்ப விசேஷம்’, ’உத்தமன்’’பட்டாபிஷேகம்’ உட்பட சுமார் 25 படங்களுக்கு மேல் இயக்கிய இவர்கள் 2004ம் ஆண்டு வெளியான’பரயம்’ படத்தோடு பிரிந்துவிட்டனர். இவர் கடைசியாக, 2013 ஆம் ஆண்டில் மம்தா மோகன்தாஸ், கனிகா, முகேஷ் நடித்த ’டு நூரா வித் லவ்’என்ற படத்தை இயக்கி இருந்தார்.இதுவே இவரது கடைசிப் படம் . அடுத்து கேன்சர் நோய் தாக்கியதால் அவரால் தொடர்ந்து படங்கள் இயக்கமுடியவில்லை.

 அவருக்கு ஜோதி என்ற மனைவியும் தர்ஷன் என்ற மகனும் ஷ்ரவ்னா என்ற மகளும் உள்ளனர். அவரது உடல் திருச்சூரில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மாலையில் இறுதி சடங்கு நடக்கிறது.இவர் மறைவுக்கு ஏராளமான திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.