கன்னட திரையுலகில் 650 படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் பிரபல நடிகர் லோக்நாத், வயது மூப்பின் காரணமாக சற்றுமுன்னர் பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 90.

1927ம் ஆண்டு பிறந்த லோக்நாத் துவக்கத்தில் நாடக நடிகராகி தன் வாழ்க்கையைத் துவங்கி 1970ல் வெளியான’சம்ஸ்காரா’படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். ‘அவரது முதல் படமே தேசிய விருது பெற்றதால் லோக்நாத்துக்கு மளமளவென்று படங்கள் குவிந்தன. ஆனாலும் நாடகத்துறையிலும் அதிக கவனம் செலுத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்தார். கன்னட சினிமாவின் அப்பா என்று செல்லமாக அழைக்கப்படும் அளவுக்கு பாதிக்கும் மேற்பட்ட படங்களில் நாயக, நாயகியரின் அப்பா வேடங்களில் நடித்தவர் லோக்நாத் என்பது குறிப்பிடத்தக்கது.

லோக்நாத்துக்கு நான்கு மகள்களும் அஸ்வின் என்ற ஒரு மகனும் உள்ளனர். ‘சமீப தினங்கள் வரை நல்ல உடல்நலத்துடன் இருந்த அவர் மறைந்த அம்பரீஷின் இறுதி யாத்திரையில் கூட கலந்துகொண்டார்’ என்று அவரது மகன் அஸ்வின் தெரிவித்தார்.

ஒட்டுமொத்த கன்னட திரயுலகமும் லோக்நாத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது அடக்கம் நாளை நடைபெறுகிறது.