ponvannan resign the nadigar sangam post

நடிகர் சங்க தேர்தலில், சரத்குமார்.. ராதாரவி உள்ளிட்ட முந்தைய நிர்வாகிகள் முறைகேடு செய்துள்ளனர் என்று கூறி பல்வேறு வாக்குறுதிகளை முன்வைத்து நாசர் தலைமையில் களமிறங்கி வெற்றி பெற்றனர் விஷால் குழுவினர். இந்த வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சங்க தலைவராக நாசரும், துணை தலைவராக பொன்வண்ணனும், பொதுச் செயலாளராக விஷாலும், பொருளாளராக கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பதவி வகித்து வருகின்றனர்.

இந்நிலையில், துணைத் தலைவர் பொன்வண்ணன் திடீர் என நடிகர் சங்க பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், தன்னுடைய சொந்த பிரச்னை காரணமாக ராஜினாமா செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் ஒரு மாதத்திற்கு முன்பே இவர் தன்னுடைய ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை இவருடைய ராஜினாமாவை நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ளாமல் இவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

இவர் இந்த முடிவை எடுக்க காரணம் விஷால் தான் என்று கூறப்படுகிறது. நடிகர் சங்கத்தைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்திலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஷால், சமீபத்தில் அரசியல் ஆசையோடு ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்தார். இவருடைய மனு நிராகரிக்கப்பட்டாலும் இதன் மூலம் தற்போது சில பிரச்சனைகள் வந்துள்ளதாகவும் தெரிகிறது.

இதன் காரணமாகத்தான்..., தற்போது ஒரு மாதம் தன்னுடைய ராஜினாமா பற்றி எதுவும் வெளியில் கூறாமல் இருந்த பொன்வண்ணன் இப்போது இதனை வெளிப் படுத்தியுள்ளார் என கூறி வருகின்றனர். தொடர்ந்து பல பிரச்சனைகள் வந்தும் இன்னும் நடிகர் சங்கத் தலைவர் நாசர் எந்த தகவலையும் வெளியிட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.