Pongal is to be seen in Suryas acting Thana sertha koottam film.

சமீபத்தில் வெளியாகிய பல படங்கள், சமூகத்தில் நடக்கும் அவலங்களையும், அன்றாட நிகழ்வுகளைப் பற்றியும், அரசியலில் நடைபெறும் குளறுபடிகளைப் பற்றியும் கருத்துகளை தெரிவித்து வருகின்றன. 

அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படம், மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் இருப்பதாக கூறி அப்படத்தை தடை செய்ய வேண்டும், என குரல் எழுப்பப்பட்டது. ஆனால் அதுவே அந்த படத்திற்கு உலக அளவில் மார்க்கெட்டிங்காக அமைந்தது. 

இதேபோல் அடுத்தடுத்து வெளியான அறம், அருவி, வேலைக்காரன் போன்ற சில படங்களும் சமூக அவலத்தை எடுத்துக்காட்டும் படமாகவும் கருத்துள்ள படமாகவும் அமைந்தன. ஆனால் இதற்கு அவ்வளவாக எதிர்ப்புகள் எழவில்லை. 

இந்நிலையில், பொங்கலுக்கு சூர்யா நடிப்பில் ’தானா சேர்ந்த கூட்டம்’ படம் வெளியாக உள்ளது. இதையடுத்து சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் வரும் சொடக்கு போட்டு பாடல் வரிகள் குறிப்பிட்ட கட்சியினரை விமர்சிக்கும் விதமாக உள்ளதால், படத்தை தடை செய்ய வேண்டும் என அரசியல்வாதி ஒருவர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்.பி.பி. பிலிம் பேக்டரி நிறுவனத்தில் முறையாக உரிமம் பெற்றிருப்பதாக படக்குழு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

கடைசி நேரத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால் தடை கோரிய வழக்கை முடித்துவைத்தது உயர்நீதிமன்றம்.