ஒட்டு மொத்த விஜய் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்த, 'மாஸ்டர்' திரைப்படம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது. அதிகாலை வெளியிடப்பட்ட ரசிகர்கள் காட்சியை பார்த்து விட்டு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ஹீரோவாகவும்,  விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்துள்ள திரைப்படம் 'மாஸ்டர்'. இரண்டு சூப்பர் ஹீரோக்கள் ஒன்று சேர்ந்து நடித்துள்ளதால் இரு தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் இந்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தது. இவர்களுடன் மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சேவியர் பிரிட்டோ பிரமாண்ட பொருட்செலவில் இந்த படத்தை தயாரித்துள்ளார்.  இந்தப் படத்தின் ஒட்டுமொத்த வெளியீட்டு உரிமையையும் லலித் குமார் கைப்பற்றியுள்ளார். இன்றைய தினம் ஜனவரி 13-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும், ஜனவரி 14ம் தேதி இந்தியில் விஜய் தி மாஸ்டர் என்ற பெயரிலும் வெளியாக உள்ளது. 

இந்நிலையில் இன்று அதிகாலையே, ரசிகர்களுடன் 'மாஸ்டர்' படத்தை பார்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், பிரபல நியூஸ் தொலைக்காட்சிக்கு காரில் இருந்தபடி பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் ரசிகர்கள் ரெஸ்பான்ஸ் நன்றாக உள்ளதாகவும், ஆனால் கொரோனா அச்சம் உள்ளதால் Social Distancing கடைப்பிடிக்கவும், sanitizer உபயோகிக்கவும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.